அமெரிக்காவில் தொடரும் இந்திய மாணவர்களின் மரணம்: இந்த ஆண்டில் 4வது சம்பவம்
அமெரிக்காவில் தொடரும் இந்திய மாணவர்களின் மரணம்: இந்த ஆண்டில் 4வது சம்பவம்
ADDED : பிப் 02, 2024 01:09 PM

வாஷிங்டன்: அமெரிக்காவில் படித்து வரும் இந்திய மாணவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த ஆண்டில் மட்டும் 4 இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் ஒஹியோவில் இந்திய மாணவர் ஸ்ரேயாஸ் ரெட்டி பெனிகேரி என்பவர் சின்சினாட்டியில் உள்ள கல்லூரியில் வணிகவியல் படித்து வந்துள்ளார். இந்நிலையில், ஸ்ரேயாஸ் ரெட்டி பெனிகேரி மர்மமான முறையில் உயிரிழந்ததாகவும், அவரது உடல் உடற்கூராய்வு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், போலீசார் தெரிவித்தனர். உடற்கூராய்வு முடிந்த பின் இந்திய மாணவர் ஸ்ரேயாஸ் ரெட்டி பெனிகேரி எப்படி இறந்தார் என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஒஹியோவில் உள்ள இந்திய வம்சாவளி மாணவர் ஸ்ரேயாஸ் ரெட்டி பெனிகேரியின் துரதிர்ஷ்டவசமான மறைவுக்கு ஆழ்ந்த வருத்தம். போலீஸ் விசாரணை நடந்து வருகிறது. இந்த கட்டத்தில், தவறான செயல்கள் குறித்து சந்தேகம் இல்லை. தூதரகம் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. அவரது குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் மர்மமாக உயிரிழந்திருப்பது இந்த ஆண்டில் மட்டும் 4வது நிகழ்வு. முன்னதாக 3 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த வார துவக்கத்தில் பர்டூ பல்கலை.,யில் படித்து வந்த நீல் ஆச்சார்யா என்ற மாணவர் மரணம் அடைந்தார். ஞாயிற்றுக்கிழமை காணாமல் போன நிலையில் திங்கட்கிழமை பல்கலைக்கழக வளாகத்தில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
ஜன.,16ல் ஜார்ஜியாவில் உள்ள லிதோனியாவில் ஹரியானாவை சேர்ந்த விவேக் சைனி மரணம் அடைந்தார். அதேபோல், இல்லினாய்ஸ் அர்பானா-சாம்பெய்ன் பல்கலை.,யில் படித்த வந்த அகுல் தவான் ஜன., மாத துவக்கத்தில் மரணம் அடைந்தார். அமெரிக்காவில் படித்து வரும் இந்திய மாணவர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

