அமெரிக்காவில் திருட்டு வழக்கில் இந்திய மாணவிகள் கைது; வைரலாகும் வீடியோ
அமெரிக்காவில் திருட்டு வழக்கில் இந்திய மாணவிகள் கைது; வைரலாகும் வீடியோ
UPDATED : செப் 15, 2025 07:41 AM
ADDED : செப் 15, 2025 07:08 AM

நியூஜெர்சி: அமெரிக்காவில் டிபார்ட்மென்ட் ஸ்டோரில் திருடிய இரு இந்திய மாணவிகளை போலீசார் கைது செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஸ்டீவன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் உயர்கல்வி பயில நியூ ஜெர்சிக்கு வந்த இரு இந்திய மாணவிகளில் ஒருவர் தெலங்கானாவையும், மற்றொருவர் ஆந்திராவையும் சேர்ந்தவராவார்.
கடந்த 2024ம் ஆண்டு நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ஹோபோக்கன் நகரில் செயல்பட்டு வரும் ஷாப் ரைட் என்ற டிபார்ட்மென்ட் ஸ்டோரில், தாங்கள் வாங்கிய சில பொருட்களுக்கு பணம் செலுத்தாமல் இரு மாணவிகளும் வெளியேற முயன்றுள்ளனர். சுமார் ரூ.13,000 மதிப்பிலான 27 வகையான பொருட்களை எடுத்து விட்டு, வெறும் 2 பொருட்களுக்கு மட்டுமே பணம் செலுத்தியுள்ளனர். எஞ்சிய பொருட்களை திருடிச் செல்ல முயன்றுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இரு மாணவிகளையும் கைது செய்தனர். அப்போது, இந்தக் காட்சிகள் போலீசார் அணிந்திருந்த பாடிகேமராவில் (BODYCAM) பதிவாகியது. தங்களின் கிரெடிட் கார்டில் பணம் குறைவாக இருந்ததால் பணம் செலுத்தவில்லை என்று அவர்கள் காரணம் கூறினர். ஆனால், அதனை போலீசார் ஏற்க மறுத்தனர்.
ஒரு கட்டத்தில் தங்களின் தவறை ஒப்புக் கொண்ட மாணவிகளில் ஒருவர், எடுத்த பொருட்களுக்கான தொகையை தற்போது கொடுத்து விடுவதாக தெரிவித்தார். மற்றொருவர், அந்தப் பொருட்களுக்கு இரட்டிப்புத் தொகையை கொடுக்க தயார் என்று கூறியுள்ளார்.
போலீசாரின் கைது நடவடிக்கையால் பயந்து போன மாணவிகள், இந்த சம்பவத்தால் தங்களிடம் உள்ள எச்1பி விசாவுக்கோ, அல்லது வேலைக்கோ பாதிப்பு ஏற்படுமா? என்று கேட்டுள்ளனர். அதற்கு போலீசாரும், 'ஆம், அவர்கள் உங்கள் தகவல்களைச் சோதித்தால், நீங்கள் கைது செய்யப்பட்டதைக் காண்பார்கள்,' என்றனர்.
இந்த சம்பவம் கடந்த 2024ம் ஆண்டு நடந்திருந்தாலும், அண்மையில் இலினாய்ஸ் மாகாணத்தில் பெண் ஒருவர் டிபார்ட்மென்ட் ஸ்டோரில் திருடிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில், தற்போது, இரு மாணவிகள் திருடியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.