ADDED : செப் 19, 2024 10:28 PM

ஏதென்ஸ்: கிரீஸ் அரசு அறிவித்த கோல்டன் விசா திட்டத்தின் கீழ் அந்நாட்டில் இந்திய முதலீட்டாளர்கள் வீடுகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடந்த 2013ம் ஆண்டு கிரீஸ் அரசு கோல்டன் விசா திட்டம் ஒன்றை அறிவித்தது. செப்., 1 முதல் அமலுக்கு வந்த இத்திட்டம், ஐரோப்பிய யூனியன் அல்லாதவர்களுக்கு மிகச்சிறப்பானதாக கருதப்பட்டது. இதன்படி, இந்திய மதிப்பில் ரூ.2.2 கோடி( 250,000 யூரோ) சொத்துகளில் முதலீடு செய்தால் நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டது.
இதனையடுத்து அங்கு, நிரந்தரமாக குடியேறுவதற்கு ஏதுவாக இந்தியர்கள் வீடுகளை வாங்க ஆர்வம் காட்ட துவங்கினர். இந்த எண்ணிக்கை, கடந்த ஜூலை முதல் ஆகஸ்ட் வரை 37 சதவீதம் அதிகரித்தது. கட்டுமான பணி நடந்து வரும் புதுக்கட்டடங்களையும் வாங்க ஆர்வம் காட்டினர்.
இதனால், அந்நாட்டின் முக்கிய நகரங்களான ஏதென்ஸ், தெசாலோனிகி, மைகோனோஸ் உள்ளிட்ட நகரங்களில் சொத்துகளின் மதிப்பு எகிற துவங்கியது. இதனை கட்டுப்படுத்துவதற்காக சொத்துகளில் முதலீடு செய்வதற்கான தொகை ரூ.7 கோடி (8,00,000 யூரோ) ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
கோல்டன் விசா திட்டத்தின் அம்சம்
*சொத்தில் செய்யும் முதலீடு காரணமாக நிதி ரீதியாக பலனளிக்கும் வகையில் அந்நாட்டு அரசு ஆண்டுதோறும் 3-5 சதவீதம் வாடகை வழங்குகிறது.
*கோவிட் பெருந்தொற்றுக்கு பிறகு, அந்நாட்டில் சொத்து மதிப்பு ஆண்டுக்கு ஆண்டு 10 சதவீதம் அதிகரித்து வருகிறது.
*முதலீடு செய்பவர்களுக்கு உலக தரத்திலான மருத்துவ வசதி, கல்வி வசதி கிடைக்க செய்வதுடன், ஐரோப்பிய யூனியனில் தொழில் துவங்கவும் ஏற்பாடு செய்யப்படும்.

