சர்வதேச போதை கடத்தல் தலைவன் மெக்சிகோ நாட்டில் சுட்டுக்கொலை
சர்வதேச போதை கடத்தல் தலைவன் மெக்சிகோ நாட்டில் சுட்டுக்கொலை
ADDED : பிப் 15, 2025 11:51 PM

மெக்சிகோ சிட்டி: போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே நடந்த தகராறில், சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவன், வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் சுட்டுக்கொல்லப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஐரோப்பிய நாடான நெதர்லாந்தைச் சேர்ந்த மார்கோ எப்பன், 32, சர்வதேச போதை பொருட்கள் கடத்தும் கும்பல்களில் முக்கியமானவர்.
கடந்த, 2014ல், தென் அமெரிக்க நாடான பிரேசிலில் இருந்து நெதர்லாந்துக்கு 'கோகைன்' கடத்திய வழக்கில் ஏழு ஆண்டு சிறைத்தண்டனை பெற்று, தலைமறைவானவர்.
இதையடுத்து, ஐரோப்பிய கூட்டமைப்பு புலனாய்வு அமைப்பான, 'ஈரோபோல்' அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருந்தது.
நெதர்லாந்தில் இருந்து தப்பிய அவர் துபாய், ரஷ்யா, இத்தாலி, துருக்கி, மெக்சிகோ போன்ற நாடுகளில் தலைமறைவாக இருந்தார்.
இந்நிலையில், மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுக்குள் நடந்த தகராறில், மார்கோ எப்பன் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். தலைநகர் மெக்சிகோ சிட்டியில் இருந்து 25 கி.மீ., தொலைவில் உள்ள அடிஜாபன் டே ஜராகோஸா என்ற இடத்தில் கார் பார்க்கிங் பகுதியில், மார்கோ எப்பன் சடலம் கிடந்தது.
அவரது உடலில் 15 குண்டுகள் பாய்ந்திருந்ததாக மெக்சிகோ போலீசார் உறுதி செய்துள்ளனர்.
அமெரிக்காவால் தேடப்பட்டு வந்த ஹம்பர்டோ ரிவைரோ என்ற போதைக்கடத்தல் மன்னனை மெக்சிகோ போலீசார் சமீபத்தில் கைது செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக, போதைக் கடத்தல் கும்பல்களுக்குள் நிகழ்ந்த அதிகாரப் போட்டியில் மார்கோ எப்பன் கொல்லப்பட்டதாக மெக்சிகோ போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.