ஐ.பி.எல்.,: 13 வயது வீரரை 1.10 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்த ராஜஸ்தான்
ஐ.பி.எல்.,: 13 வயது வீரரை 1.10 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்த ராஜஸ்தான்
UPDATED : நவ 25, 2024 11:30 PM
ADDED : நவ 25, 2024 10:25 PM

ஜெட்டா: இரண்டாம் நாளாக நடக்கும் ஐ.பி.எல்., ஏலத்தில் பீஹாரைச் சேர்ந்த 13 வயது வீரரை ராஜஸ்தான் அணி 1.10 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் ஐ.பி.எல்., ஏலம் இரண்டாவது நாளாக இன்று விறுவிறுப்பாக நடந்தது. அதில், முன்னணி வீரர்கள் கோடிக்கணக்கில் ஏலம் போன நிலையில் சில வீரர்கள் விலை போகவில்லை.
ஆனால், அங்கு அனைவரையும் ஆச்சர்யம் அளிக்கும் விதமாக பீஹாரைச் சேர்ந்த 13 வயதே ஆன வைபவ் சூரியவன்ஷி என்ற வீரரை ராஜஸ்தான் அணி 1.10 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இதில், இந்த வீரரை வாங்க டில்லி அணியும் ஆர்வம் காட்டியது. கடைசியில் ராஜஸ்தான் அணிக்கே அது சாத்தியமானது.
யார் இவர்
2011 ல் பிறந்த வைபவ் சூரியவன்ஷி 4 வயது முதல் கிரிக்கெட் விளையாடி வருகிறார். இவரின் ஆர்வத்தை பார்த்த தந்தை சஞ்சீவ், வீட்டின் பின்புறத்தில் அவர் கிரிக்கெட் விளையாடுவதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுத்தார்.
9 வயதான பிறகு மகனை கிரிக்கெட்டில் பெரிய வீரர் ஆக்க வேண்டும் என்பதற்காக சமஸதிபூரில் உள்ள கிரிக்கெட் அகடமியில் சேர்த்து விட்டார். அங்கு அவரின் வயதுக்கு மீறிய திறமை அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
அங்கு இரண்டரை ஆண்டு பயிற்சிக்கு பிறகு, விஜய் மெர்சண்ட் டிராபி தொடருக்காக பயிற்சியிலும் வைபவ் சூரியவன்ஷி ஈடுபட்டார். ரஞ்சி வீரரான மணிஷா ஒஜா இந்த பயிற்சியை அளித்தார். அவரிடம் இருந்து ஏராளமான விஷயங்களை அவர் கற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து 12 வயதில் பீஹார் அணிக்காக வினு மன்கட் டிராபி தொடரில் விளையாடிய வைபவ் சூரியவன்ஷி 5 போட்டிகளில் 400 ரன்களை சேர்த்து அசத்தினார். தொடர்ந்து 12 வயதுக்கு உட்பட்டோருக்கான பீஹார் அணிக்கு தேர்வானார்.
இதனைத் தொடர்ந்து சமீபத்தில் சென்னையில் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் ஆஸி., அணிக்கு எதிராக 58 பந்துகளில் சதமடித்தார். இதன் மூலம் இளம் வயதில் அதிவேக சதம் அடித்தவர் என்ற பெருமை இவருக்கு கிடைத்தது. தற்போது ராஜஸ்தான் அணிக்காக தேர்வாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.