மூன்று செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் ஏவுகிறது ஈரான்
மூன்று செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் ஏவுகிறது ஈரான்
ADDED : நவ 14, 2025 03:05 AM
டெஹ்ரான்: உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மூன்று புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை, ஒரே நேரத்தில் விண்ணில் ஏவ உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
மேற்காசிய நாடான ஈரான், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட, 'பயா, ஜாபர், கோவ்சர்' ஆகிய மூன்று புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை, அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஒரே நேரத்தில் விண்ணில் ஏவ திட்டமிட்டு உள்ளது.
இது குறித்து, ஐ.எஸ்.ஏ., எனப்படும் ஈரான் விண்வெளி அமைப்பின் தலைவர் ஹசன் சலாரியே கூறியதாவது:
பல ஆண்டுகளாக மேற்கத்திய நாடுகள் விதித்த பல்வேறு தடைகள் இருந்த போதும், விண்வெளி திட்டத்தில் பெரிய முன்னேற்றங்களை ஈரான் கண்டுள்ளது. இதன்படி, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பயா, ஜாபர், கோவ்சர் ஆகிய மூன்று செயற்கைக்கோள்களை, ஒரே ராக்கெட் மூலம் ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். விவசாயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை தொடர்பான தரவுகளை, இந்த மூன்று செயற்கைக்கோள்கள் வழங்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

