பிப்ரவரியில் வங்கதேச பொதுத்தேர்தலுடன் அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கும் ஓட்டெடுப்பு
பிப்ரவரியில் வங்கதேச பொதுத்தேர்தலுடன் அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கும் ஓட்டெடுப்பு
ADDED : நவ 14, 2025 02:48 AM

டாக்கா: ''வங்கதேசத்தில், பிப்ரவரியில் நடக்கும் பொதுத்தேர்தலுடன் சேர்த்து, அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கான ஓட்டெடுப்பும் நடத்தப்படும்,'' என, அந்நாட்டின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், 2024 ஆகஸ்டில், அரசுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் அரசு கவிழ்க்கப்பட்டது.
நாட்டை விட்டு வெளியேறிய அவர், நம் நாட்டில் தஞ்சமடைந்தார். தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.
வங்கதேச அரசியலமைப்பு சட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களை கொண்டு வரும் வகையில், 'ஜூலை சாசனம்' என்ற ஆவணத்தை இடைக்கால அரசு அறிமுகப்படுத்தியது.
இது குறித்து பல்வேறு கட்சிகளுடன் பல கட்ட ஆலோசனைகள் நடந்த நிலையில், சீர்திருத்தங்களை மேற்கொள்ள, கடந்த மாதம் 17ல் முக்கிய கட்சிகள் சம்மதம் தெரிவித்தன.
எனினும், இது தொடர்பாக பொது ஓட்டெடுப்பை நடத்துவது குறித்து ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
அதிருப்தி அடைந்த முகமது யூனுஸ், 'பொது ஓட்டெடுப்புக்கு ஒரு வாரத்துக்குள் எதிர்க்கட்சிகள் ஒருமித்த கருத்தை எட்டவில்லை என்றால், அரசே அது குறித்து முடிவு எடுக்கும்' என்றார்.
இந்நிலையில், ''2026 பிப்ரவரியில் நடக்கவுள்ள வங்கதேச பொதுத் தேர்தலுடன், அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கான ஓட்டெடுப்பும் நடத்தப்படும்,'' என, இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் நேற்று தெரிவித்தார்.
என்னென்ன சீர்திருத்தங்கள்?
பார்லிமென்டில் தற்போதுள்ள ஒரு சபைக்கு பதிலாக, இரு சபைகளை உருவாக்குதல். அதாவது, கீழ் சபையை தேர்தல் வாயிலாகவும், மேல் சபையை தேசிய ஓட்டுகளின் அடிப்படையில் விகிதாசார முறையில் தேர்ந்தெடுப்பது
தேர்தலை கண்காணிக்க நடுநிலையான இடைக்கால நிர்வாகத்தை மீண்டும் நிறுவுதல்
நிர்வாகம், நீதித்துறை மற்றும் சட்டசபைகளுக்கு இடையே அதிகார சமநிலையை வலுப்படுத்துதல்; நீதித்துறையில் சுதந்திரத்தை உறுதி செய்தல்
ஜூலை சாசனத்திற்கு அரசியலமைப்பு அங்கீகாரம் அளித்தல்.

