போரில் குதித்தது அமெரிக்கா: அணு ஆயுத தளங்கள் மீது ராட்சத குண்டு வீச்சு: பதிலடியில் அமெரிக்கா கதறும் என்கிறது ஈரான்
போரில் குதித்தது அமெரிக்கா: அணு ஆயுத தளங்கள் மீது ராட்சத குண்டு வீச்சு: பதிலடியில் அமெரிக்கா கதறும் என்கிறது ஈரான்
UPDATED : ஜூன் 23, 2025 06:09 AM
ADDED : ஜூன் 23, 2025 12:01 AM

வாஷிங்டன்:“ஈரானில் உள்ள மூன்று முதன்மையான அணுசக்தி நிலையங்கள் மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியுள்ளோம்,” என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். மூன்று நிலையங்களும் செயலிழந்ததாக அவர் தெரிவித்தார். எனினும், அந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை.
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களம் இறங்கியதால், மேற்கு ஆசிய பிராந்தியம் மட்டுமின்றி, உலகம் முழுதும் கவலை தொற்றிக் கொண்டுள்ளது. அமெரிக்காவின் தலையீடு அந்த பகுதியில் சீக்கிரமே அமைதியை ஏற்படுத்த துாண்டுதலாக அமையலாம் அல்லது நெடுங்காலம் தொடரக்கூடிய மோசமான போரின் துவக்கமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர்.
'அமெரிக்கா தாக்கினால், மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்' என்று, ஈரான் தலைவர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார்.
கண்டிப்பு
இதையடுத்து, அமெரிக்க அதிபரும் இறங்கி வருவதாக தோன்றியது. 'ஈரானின் அணு ஆயுத தளங்களை தாக்குவது குறித்து, இன்னும் இரண்டு வாரத்தில் முடிவு எடுப்பேன்' என்று, டிரம்ப் அப்போது சொன்னார். சொல்லி இரண்டு நாட்கள் முடிவதற்குள் தாக்குதலை நடத்தி இருப்பதால், ஈரான் அரசு கோபத்தில் தகிக்கிறது.
'உண்மையான போர் இப்போது தான் துவங்கி இருக்கிறது. அமெரிக்கா இதுவரை கண்டிராத பேரழிவை சந்திக்கும். ஈரானை ஏன் தாக்கினோம் என்று அமெரிக்கர்கள் கதறி புலம்பும் நிலையை உருவாக்குவோம்' என்று, ஈரான் அமைச்சர் கூறுகிறார். இஸ்ரேலின் நீண்டகால எதிரியான ஈரானுக்கு ஆதரவாக இருந்து வரும் ரஷ்யா, சீனா, துருக்கி போன்ற நாடுகள் அமெரிக்காவை பலமாக கண்டித்துள்ளன. அவை ஈரானுக்கு சாதகமான ராணுவ நடவடிக்கையில் இறங்கினால், நிலைமை பெரிதும் சிக்கலாகி, மூன்றாம் உலகப்போர் வரை செல்லக்கூடும் என்று, பலர் கவலை தெரிவிக்கின்றனர்.
ஈரான் - - இஸ்ரேல் இடையே, 10 நாட்களாக சண்டை நடக்கிறது. இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்கள், அமெரிக்கர்கள் அவசரமாக சொந்த நாட்டுக்கு திரும்புகின்றனர். 'அணு ஆயுதம் தயாரிக்கும் திட்டத்தை ஈரான் முற்றிலுமாக கைவிடாத வரையில், போரை நிறுத்த மாட்டோம்' என்று இஸ்ரேல் கூறுகிறது. ஆனால், மிகவும் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ள ஈரானின் அணு ஆயுத தளங்களை, இஸ்ரேல் ராணுவத்தால் முடக்கவோ தகர்க்கவோ முடியவில்லை.
' பங்கர் பஸ்டர்'
மலைக்கு கீழேயும், பூமிக்கு அடியிலுமாக ஈரான் அமைத்துள்ள அணு ஆயுத தளங்களை அழிக்கும் சக்திவாய்ந்த குண்டுகளும், அவற்றை சுமந்து செல்லக்கூடிய விமானங்களும் அமெரிக்காவிடம் மட்டுமே இருக்கின்றன. 'பங்கர் பஸ்டர்' என்ற செல்லப்பெயரால் அமெரிக்கர்கள் குறிப்பிடும், இந்த குண்டுகள் ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட ஒன்றரை டன் எடை உடையவை. போர்டோ, நடான்ஸ், இஸ்பஹான் ஆகிய மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது, இந்த குண்டுகள் போடப்பட்டன.
'ஜி.பி.யு. - 57' என்ற இந்த 13,700 கிலோ குண்டு, நிலமட்டத்தில் இருந்து 200 அடி ஆழம் வரை துளைத்துச் சென்று வெடிக்கும் தன்மை உடையது. விமானத்தில் இருந்து இவை வீசப்பட்ட அதே நேரத்தில், அமெரிக்க நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து செலுத்தப்பட்ட 30 ஏவுகணைகளும், ஈரான் அணுசக்தி நிலையங்களை தாக்கின. தாக்குதல் வெற்றிகரமாக நடந்து, அணு ஆயுத தளங்கள் முடக்கப்பட்டு விட்டதாக டிரம்ப் அறிவித்தார். இதற்கு பதிலடி தருவதாக சொல்லிக்கொண்டு, அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் ஏதேனும் தாக்குதல் நடத்தினால், இதுவரை உலகம் காணாத அளவுக்கு அமெரிக்கா திருப்பி அடிக்கும் என்றும், அவர் எச்சரித்தார். அவருக்கு, இஸ்ரேல் நன்றி தெரிவித்துள்ளது.