பொருளாதார தடை விதித்தால் போர்: அமெரிக்காவுக்கு ஈரான் மிரட்டல்
பொருளாதார தடை விதித்தால் போர்: அமெரிக்காவுக்கு ஈரான் மிரட்டல்
ADDED : ஆக 24, 2026 08:43 PM
வாஷிங்டன் : ஈரானை முற்றிலும் முடக்கும் வகையில் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பொருளாதாரத் தடைகளை விதிக்கப் போவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. அது கடுமையான போருக்கு வழிவகுக்கும் என, ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக மேற்காசிய நாடான ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கடந்த ஆறு மாதங்களாக மறைமுக மற்றும் நேரடி மோதல்கள் நீடித்து வருகின்றன. ராணுவத் தாக்குதல்கள் மூலம் ஈரானின் அணுசக்தி திட்டங்களையும், ஆயுதத் தயாரிப்பு மையங்களையும் முடக்கியபோதிலும், ஈரான் அரசை முழுமையாக வீழ்த்தவோ அல்லது முற்றிலுமாக பணிய வைக்கவோ அமெரிக்காவால் முடியவில்லை.
எனவே, நேரடிப் போருக்குப் பதிலாக பொருளாதார ரீதியாக ஈரானை முழுமையாக முடக்குவது என்ற உத்தியை அமெரிக்கா கையில் எடுத்துள்ளது. வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 'எக்கனாமிக் டி டே' எனப்படும் மிகப்பெரிய நிதித் தாக்குதல் தொடங்கப்படும் என்று அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் எச்சரித்துள்ளார். ஈரானுடன் வணிகம் செய்யும் சீனா போன்ற நாடுகளுக்கும் கடும் விளைவுகள் ஏற்படும் என அவர் தெரிவித்தார்.
எண்ணெய் விற்பனை, வங்கித் தொடர்புகள், வர்த்தகப் பாதைகள் போன்ற அனைத்து பொருளாதார வாய்ப்புகளையும் துண்டித்து, ஈரானை தனிமைப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
அமெரிக்காவின் இந்தத் தடைகள் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்றும், மற்ற நாடுகளின் இறையாண்மையில் தலையிடுவதாக உள்ளதாகவும் ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் பொருளாதார போருக்கு எந்த நாடாவது உதவினாலோ அல்லது பங்கேற்றாலோ, அது தங்களுக்கு எதிரான போராகவே கருதப்படும் என ஈரான் பகிரங்கமாக எச்சரித்துள்ளது.
பொருளாதார போர் தொடர்ந்தால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு துளி எண்ணெய் கூட ஏற்றுமதி செய்யப்படாது என்றும் ஈரான் திட்டவட்டமாக கூறியுள்ளது.
ஈரானின் ரியால் வரலாறு காணாத சரிவு
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ள புதிய பொருளாதாரத் தடைகளின் எதிரொலியாக, ஈரானின் கரன்சியான ரியால் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு கடும் சரிவை சந்தித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிராக ஈரானின் ரியால் மதிப்பு ஒரே நாளில் 4.5 சதவீதம் சரிந்து, புதிய சாதனையைப் படைத்துள்ளது. சந்தை நிலவரப்படி, ஒரு அமெரிக்க டாலருக்கு எதிரான ரியாலின் மதிப்பு, 20.2 லட்சமாக உயர்ந்துள்ளது.
