மேற்காசிய நாடுகளுக்கு ஈரான்... எச்சரிக்கை! இஸ்ரேலுக்கு உதவுவதற்கு எதிர்ப்பு
மேற்காசிய நாடுகளுக்கு ஈரான்... எச்சரிக்கை! இஸ்ரேலுக்கு உதவுவதற்கு எதிர்ப்பு
ADDED : அக் 13, 2024 07:36 AM

டெஹ்ரான்: மேற்காசியாவில் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேலுக்கு உதவும் வகையில் செயல்பட்டால், பெரும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என, அந்தப் பிராந்தியத்தில் உள்ள எண்ணெய் வளமிக்க அமெரிக்க ஆதரவு நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்காசியாவில், கடந்தாண்டு அக்., 7ல் துவங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான சண்டை மும்முனை போராக மாறியுள்ளது.
ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக அண்டை நாடான லெபனானில் இருந்து ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் அந்த அமைப்பின் தலைவர் உட்பட பல முக்கிய தளபதிகளை இஸ்ரேல் ராணுவம் கொன்றது.
இந்த இரண்டு பயங்கரவாத அமைப்புகளுக்கும் ஆதரவு அளித்து வரும் ஈரான், இஸ்ரேல் மீது 180 ஏவுகணைகளை செலுத்தி தாக்குதலில் ஈடுபட்டது.
இதையடுத்து, ஈரான் மீது எந்த நேரத்திலும் இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் உள்ளது. ஈரானின் அணுசக்தி மையம் அல்லது எண்ணெய் கிடங்கு அல்லது ராணுவ முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆதரவு
இந்தப் போரில், இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.
மேற்காசியாவில் உள்ள எண்ணெய் வளம் அதிகம் உள்ள சவுதி அரேபியா, யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜோர்டான், கத்தார் போன்றவை, அமெரிக்காவுக்கு ஆதரவாக உள்ள நாடுகள்.
இந்த நாடுகளில், அமெரிக்கா தன் படைகளை நிறுத்தி வைத்துள்ளது. அணு ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே ஏற்கனவே மோதல் உள்ளது.
இந்நிலையில், ஈரான் மீது தாக்குதல் நடத்தினால், இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதன் படைகளும் போரில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மேற்காசியாவில் உள்ள அமெரிக்க படைகள், ஈரானுக்கு எதிராக பயன்படுத்தப்படலாம். மேலும், அமெரிக்க ஆதரவு நாடுகளும், இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும்.
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், அது பெரிய அளவிலான போராக மாறும் அபாயம் உள்ளது. ஈரானில் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
இதையடுத்து, ஈரான், மேற்காசியாவில் உள்ள எண்ணெய் வளமிக்க மற்றும் அமெரிக்க ஆதரவு நாடுகளுக்கு, ரகசிய தகவல்களை அனுப்பி வைத்துள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டால், கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என, ஈரான் அதில் எச்சரித்துள்ளது.
அச்சம்
தங்கள் நிலப்பகுதியை, எங்களுக்கு எதிரான தாக்குதலுக்கு அமெரிக்கா பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று அந்த நாடுகளுக்கு ஈரான் எச்சரித்துள்ளது. சவுதி அரேபியா, ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளும், தங்களை இந்தப் போரில் இழுக்க வேண்டாம் என, அமெரிக்காவிடம் கூறிஉள்ளதாக தகவல்களை தெரிவிக்கின்றன.
போர் தீவிரமானால், தங்களுடைய எண்ணெய் வளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தில் இந்த நாடுகள் உள்ளன.