ஈரான் போரில் வெற்றி பெறாது: ஜி7 மாநாட்டில் இஸ்ரேலை ஆதரிக்கிறார் டிரம்ப்!
ஈரான் போரில் வெற்றி பெறாது: ஜி7 மாநாட்டில் இஸ்ரேலை ஆதரிக்கிறார் டிரம்ப்!
UPDATED : ஜூன் 16, 2025 10:04 PM
ADDED : ஜூன் 16, 2025 09:55 PM

வாஷிங்டன்: இஸ்ரேல் உடனான போரில் ஈரான் வெற்றி பெறாது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.
அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா ஆகிய 7 நாடுகளை உள்ளடக்கியது, 'ஜி - 7' அமைப்பு. நடப்பாண்டிற்கான, 'ஜி - 7' நாடுகளின் உச்சி மாநாடு கனடாவின் கனனாஸ்கிஸ் என்ற இடத்தில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேசியதாவது:
இஸ்ரேல் உடனான போரில் ஈரான் வெற்றி பெறாது. மிகவும் தாமதமாகிவிட்டது. இனியும் தாமதிக்காமல், ஈரான் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும். அவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்ய வேண்டும். பதற்றத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈரானால் எந்த வகையிலும் நாங்கள் தாக்கப்பட்டால், அமெரிக்க ஆயுதப் படைகளின் முழு பலமும் வலிமையும் இதற்கு முன் கண்டிராத அளவில் பதிலடி கொடுக்கும்.
அமெரிக்க நலன்கள் மீது எந்தவொரு தாக்குதல் நடத்தப்பட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஜி7 மாநாட்டில் இஸ்ரேலுக்கு ஆதரவாக டிரம்ப் பேசியுள்ளார். இஸ்ரேலில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் இன்று ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் சேதமடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.