UPDATED : ஏப் 30, 2024 11:57 PM
ADDED : ஏப் 30, 2024 11:56 PM

லண்டன் :'கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு, மிக அரிதாக பக்க விளைவு ஏற்படும்' என, தடுப்பூசியை தயாரித்த, 'ஆஸ்ட்ரா ஜெனேகா' நிறுவனம், பிரிட்டன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலின்போது, ஆஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் கோவிஷீல்டு என்ற தடுப்பூசி மருந்தை தயாரித்தது. 'சீரம் இந்தியா' நிறுவனம் அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, அதே பெயரில் தடுப்பூசி தயாரித்தது.
51 வழக்குகள்
குறைந்தபட்சம் ஒருவருக்கு இரண்டு டோஸ் வீதம், நம் நாட்டில் மட்டும் 175 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது.
கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டதால், பக்க விளைவுகள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டதாகவும், பலர் மரணம் அடைந்ததாகவும் பிரிட்டிஷ் நீதிமன்றங்களில் வழக்குகள்
தொடரப்பட்டன.
இந்த வகையில், 51 வழக்குகள் ஒன்றாக சேர்க்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றன. மொத்தமாக, தடுப்பூசி நிறுவனம் 1,047 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க மனுதாரர்கள் கோரிஉள்ளனர்.
கொரோனா நெருக்கடிக்கு பின் இளைஞர்களிடம் மாரடைப்பு, பக்கவாதம், உடல் சோர்வு போன்ற பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.
பக்க விளைவுகள் குறித்து இதுவரை வாய் திறக்காத ஆஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம், தாங்கள் தயாரித்த தடுப்பூசி மருந்தால் ரத்தத்தை உறைய வைக்கும் ஒரு நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக தற்போது தெரிவித்துள்ளது.
இந்த பாதிப்பு அரிதாக சிலருக்கு ஏற்படலாம் என லண்டன் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், அந்த நிறுவனம் கூறியுள்ளது.டி.டி.எஸ்., எனப்படும் 'த்ரோம்போசிஸ் மற்றும் த்ரோம்போசைடோபினியா சிண்ட்ரோம்' என்ற அந்த நோய் தாக்கினால், மூளை அல்லது உடலின் ஏதாவது ஒரு பகுதியில் ரத்தம் உறைந்து கட்டியாகிவிடும். ரத்த அணுக்களின் எண்ணிக்கையும் குறையலாம்.
அறிகுறி
தீராத தலைவலி, அடிக்கடி வயிற்று வலி, கால்கள் வீங்குவது, மூச்சு விடுவதில் சிரமம், நரம்பியல் பிரச்னை போன்றவை இதற்கான அறிகுறிகளாக கூறப்படுகிறது. இந்த நோயை சுலபமாக கண்டுபிடிக்க முடியாது. மரணத்தை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது என, உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
'தி டெய்லி டெலிகிராப்' உள்ளிட்ட பத்திரிகைகள் விரிவாக இந்த தகவலை வெளியிட்டதை தொடர்ந்து, கோவிஷீல்டு போட்டவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனினும், தடுப்பூசி போட்டுக் கொண்ட சில மாதங்களுக்குள் பக்க விளைவுகள் ஏற்படலாமே தவிர, ஆண்டுகள் கடந்த பின் உண்டாகும் நோய்களை தடுப்பூசியுடன் தொடர்புபடுத்த முடியாது என, சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.