அமெரிக்க 'டிக் டாக்' நிர்வாகத்தை எலான் மஸ்கிடம் அளிக்க திட்டம்?
அமெரிக்க 'டிக் டாக்' நிர்வாகத்தை எலான் மஸ்கிடம் அளிக்க திட்டம்?
ADDED : ஜன 15, 2025 08:53 AM

வாஷிங்டன்: 'டிக் டாக்' செயலிக்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ள நிலையில், அதன் அமெரிக்க நிர்வாகத்தை தொழிலதிபர் எலான் மஸ்கிடம் வழங்க சீன அரசு முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
'டிக் டாக்' எனப்படும், 'மொபைல் போன்' செயலி உலக அளவில் பிரசித்தம். இசை, நடனம், நடிப்பு உள்ளிட்ட திறமைகளை வெளிக்காட்டும் களமாக இது இருப்பதால், வயது வித்தியாசம் இன்றி பல்வேறு தரப்பினரும் இதை பயன்படுத்துகின்றனர்.
சீனாவை சேர்ந்த, 'பைட்டான்ஸ்' என்ற நிறுவனம் இந்த செயலியை உருவாக்கி உலகம் முழுதும் நிர்வகித்து வருகிறது. தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக, 'டிக் டாக்' செயலிக்கு இந்திய அரசு தடை விதித்தது.
அமெரிக்காவில், 17 கோடிக்கும் அதிகமானோர் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலிக்கு அமெரிக்க அரசு சமீபத்தில் தடை விதித்தது. இதை எதிர்த்து, அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் டிக் டாக் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த செயலி பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் உடையது என்பதால், இந்த தடையை விலக்க சீன அரசு முயன்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, 'எக்ஸ்' சமூகவலைதளத்தின் உரிமையாளரும், அமெரிக்க தொழிலதிபருமான எலான் மஸ்கிடம், டிக் டாக் நிர்வாகத்தை ஒப்படைக்க சீன அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதே நேரம், டிக் டாக் நிறுவனத்தின் உரிமை பைட்டான்ஸ் நிறுவனத்திடமே இருக்கும் என்றும், நிர்வாகத்தை மட்டுமே எலான் மஸ்கிடம் வழங்க முயற்சிகள் நடப்பதாகதகவல் வெளியாகி உள்ளது.