காசாவில் தற்காலிக போர் நிறுத்தம்; இஸ்ரேல் ஒப்புதல்
காசாவில் தற்காலிக போர் நிறுத்தம்; இஸ்ரேல் ஒப்புதல்
ADDED : மார் 02, 2025 08:05 AM

ஜெருசலேம்: ரம்ஜான் பண்டிகை காலத்தில் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள், மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் நுழைந்து, கடந்த 2023 அக்.,ல் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர்; 200 பேரை பிணைக்கைதிகளாக கடத்திச் சென்றனர். இதற்கு பதிலடியாக கடந்த 15 மாதங்களாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், காசாவில் 48,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அமெரிக்கா மற்றும் ஐ.நா.,வின் முயற்சியால், இரு தரப்பிற்கும் இடையே கடந்த ஜன., 19 முதல் முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் அரசும், அந்நாட்டு பிணைக் கைதிகளை ஹமாஸ் தரப்பும் விடுவித்து வருகின்றன. இந்த போர் நிறுத்தம் ஒப்பந்தம் விரைவில் முடிவடைய உள்ளது.
இந்நிலையில், ரம்ஜான் பண்டிகை காலத்தில் காசாவில் தற்காலிக போர்நிறுத்தம் செய்வதற்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தூதர் ஸ்டீவ் விட்காப் முன் மொழிவுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. ஏற்கனவே போர்நிறுத்தத்தின் முதல் கட்டம் காலாவதியாகும் தருவாயில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
'மத விடுமுறை நாட்களில் பதட்டங்களைத் தணிப்பதே தற்காலிக போர்நிறுத்தத்தின் நோக்கமாகும். ரம்ஜான் தொடங்கும்போது, உலகெங்கிலும் உள்ள பலர் பிரார்த்தனை மற்றும் உண்ணாவிரதத்துடன் மாதத்தை வரவேற்கிறார்கள். இதனால் தற்காலிக போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது' என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.