போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக காசா மீது இஸ்ரேல் தாக்குதல்: 104 பேர் பலி
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக காசா மீது இஸ்ரேல் தாக்குதல்: 104 பேர் பலி
ADDED : அக் 30, 2025 12:49 AM

காசா: போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக, ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், 46 குழந்தைகள் உட்பட 104 பாலஸ்தீனியர்கள் பலியாகினர். இந்தத் தாக்குதலுக்குப் பின், போர் நிறுத்தும் மீண்டும் தொடர்வதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே, இரண்டு ஆண்டுகளாக போர் நடந்தது.
அமெரிக்காவின் தலையீட்டில், கடந்த 10ம் தேதி இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.
அதன்படி, ஹமாஸ் பிடியில் இருந்த பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். பதிலுக்கு இஸ்ரேல் 2,000 பாலஸ்தீன கைதிகள் மற்றும் போர்க் கைதிகளை விடுவித்தது. மேலும் காசாவில் இருந்த இஸ்ரேல் படைகள் வாபஸ் பெறப்பட்டன.
இந்நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் வீரர் ஒருவரைக் கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ரபா பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட எல்லைக்குள் நிறுத்தப்பட்டுள்ள இஸ்ரேலிய படைகள் மீது தாக்குதல் நடத்தியதாக, ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனை ஹமாஸ் பயங்கரவாதிகள் மறுத்துள்ளனர்.
ஆனால், அதற்கு பதிலடியாக மத்திய காசாவில் நேற்று முன்தினம் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
இதில் புரைஜ் அகதிகள் முகாம், சப்ரா, கான் யூனிஸ் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 104 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள இஸ்ரேல், போர் நிறுத்த ஒப்பந்தத்தை் தொடர்ந்து நிலைநிறுத்துவோம். ஆனால், எந்தவொரு விதி மீறலுக்கும் உறுதியாக பதிலடி கொடுப்போம் என்று கூறியுள்ளது.

