ADDED : டிச 03, 2024 11:58 AM

ஜெருசலேம்: போர் நிறுத்தத்திற்கு மத்தியில், லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், 11 பேர் கொல்லப்பட்டனர்.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் காசா பகுதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே, கடந்தாண்டு அக்டோபரில் போர் துவங்கியது. அண்டை நாடான லெபனானில் இருந்து இயங்கும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு, ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக, இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தி வந்தது.
இந்த இரண்டு பயங்கரவாத அமைப்புகளுக்கும் ஆதரவு அளித்து வரும் ஈரானும், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. கடந்த 14 மாதங்களாக மும்முனை தாக்குதல்களை இஸ்ரேல் சந்தித்து வந்தது. ஒரு பக்கம் ஹமாஸ் அமைப்பை கட்டுப்படுத்திய நிலையில், கடந்த சில மாதங்களாக ஹிஸ்புல்லா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரமாக்கியது. அதன் முக்கிய தலைவர்கள் ஒவ்வொருவராக கொல்லப்பட்டனர். மேற்காசியாவில் பதற்றம் நிலவி வந்தது.
இந்நிலையில், இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடான பிரான்ஸ் முயற்சிகள் மேற்கொண்டன. இதன்படி, இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்புகள் போரை நிறுத்துவதற்கு ஒப்புக் கொண்டன. இதற்கான உடன்பாடு ஏற்பட்டு, நவ.,27ம் முதல் அமலுக்கு வந்தது. அடுத்த 60 நாட்களுக்கு, இரு தரப்பும் எந்தத் தாக்குதல்களையும் நடத்தக் கூடாது.
லெபனானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் படைகள், தங்களுடைய எல்லைக்கு திரும்ப வேண்டும் என்பது தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் முக்கிய அம்சங்கள்.ஆனால், போர் நிறுத்த ஒப்பந்தம் காற்றில் பறந்தது. இஸ்ரேல் லெபனான் முழுவதும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
அப்போது, இஸ்ரேலின் ராணுவமும், ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்புகளும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் லெபனானில் 11 பேர் கொல்லப்பட்டனர். ஹிஸ்புல்லா படையினர் முதலில் தாக்குதல் நடத்தியதால், நாங்கள் பதில் தாக்குதல் நடத்தினோம் என இஸ்ரேல் ராணுவத்தினர் தெரிவித்தனர்.