வெறித்தனமாக தாக்க போவதாக இஸ்ரேல் மிரட்டல்; பதில் தாக்குதலை தீவிரப்படுத்தியது ஈரான்
வெறித்தனமாக தாக்க போவதாக இஸ்ரேல் மிரட்டல்; பதில் தாக்குதலை தீவிரப்படுத்தியது ஈரான்
UPDATED : ஜூன் 17, 2025 04:19 AM
ADDED : ஜூன் 17, 2025 04:18 AM

டெல் அவிவ்: மேற்காசியாவில் இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையேயான தாக்குதல், நான்காவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இஸ்ரேலுக்குள், நுாற்றுக்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஈரான் செலுத்தியது.
இதற்கு பதிலடியாக, ஈரானுக்குள் தீவிர தாக்குதல்கள் நடத்தப் போவதாகவும், டெஹ்ரானில் இருந்து மக்கள் வெளியேறும்படியும் இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
பரஸ்பர தாக்குதல்
இஸ்ரேல் - ஈரான் இடையே நீண்ட காலமாக மோதல்கள் உள்ளன. பல காலகட்டங்களில் இரு நாடுகளும் பல முறை நேரிடையாக தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு இஸ்ரேல் மீது, 2023 அக்டோபரில் தாக்குதல் நடத்தியது.
ஹமாஸ் தவிர, ஹவுதி, ஹிஸ்பொல்லா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு ஈரான் ஆதரவு அளித்து, துாண்டி விட்டு வந்துள்ளது.
இதனால், இஸ்ரேல் - ஈரான் இடையேயான விரோதம் மேலும் மோசமடைந்தது. இதைத் தவிர, அணு ஆயுதத் தயாரிப்புக்கு ஈரான் தயாராவது, தனக்கு விடப்பட்டுள்ள நேரடி எச்சரிக்கை என்று இஸ்ரேல் கூறி வருகிறது.
![]() |
அணுசக்தி தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சமீபத்தில் நடந்த பேச்சு தோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 13ல் ஈரானில் மிகப் பெரிய தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது.
இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்தது. இரு நாடுகளும் பரஸ்பரம், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் வாயிலாக தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.
இரு நாடுகளுக்கும் இடையே, 1,500 கி.மீ., துார இடைவெளியும், நடுவில் சில நாடுகளும் உள்ள போதிலும், இந்த தாக்குதல்கள் தீவிரமடைந்தன. ஈரானின் அணுசக்தி வளாகங்களையும், அணுசக்தி செறிவூட்டும் மையங்களையும் குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
உலகிலேயே மிகவும் வலுவான வான்தடுப்பு வசதி வைத்துள்ள இஸ்ரேலுக்குள், ஈரான் அனுப்பிய ஏவுகணைகள் நுழைந்தும் சேதத்தை ஏற்படுத்தின.
224 பேர் பலி?
இந்நிலையில், நான்காவது நாளாக நேற்றும் இரு தரப்பும் பரஸ்பரம் தாக்குதல்களை தீவிரப்படுத்தின. ஈரான், 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகள், ட்ரோன்களை அனுப்பியது. இதில், எட்டு பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானுக்குள் இஸ்ரேலும் ஏவுகணை, ட்ரோன் தாக்குதலை நடத்தியது. ஈரான் அனுப்பிய, 120 ஏவுகணைகள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
இதைத் தொடர்ந்து, ஈரானின் வான்தடுப்பு வசதிகளை முழுமையாக சேதப்படுத்தியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. அதனால், ஈரானுக்குள் நுழைந்து வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்தப் போவதாக கூறியுள்ளது.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள பெரும்பாலான மக்களை பாதுகாப்பாக வெளியேறும்படியும், இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுபோலவே, காசா மற்றும் லெபனானிலும் தாக்குதல்களை நடத்தப் போவதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
இதுவரை நடந்துள்ள தாக்குதல்களில், 224 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரான் தரப்பு கூறுகிறது. ஆனால், 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக, நிவாரண அமைப்புகள் கூறுகின்றன.
ஈரான் நடத்திய தாக்குதல்களில், 24 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 500 பேர் காயமடைந்துள்ளதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது. மேலும், 370 ஏவுகணைகள், 100க்கும் மேற்பட்ட ட்ரோன்களை அழித்துள்ளதாகவும், இஸ்ரேல் கூறுகிறது.