இதை செய்யாவிட்டால் போர் நிறுத்தம் வாபஸ்; ஹிஸ்புல்லாவுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை
இதை செய்யாவிட்டால் போர் நிறுத்தம் வாபஸ்; ஹிஸ்புல்லாவுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை
ADDED : ஜன 06, 2025 07:31 AM

ஜெருசலேம்: 'லெபனான் தெற்கு பகுதியில் உள்ள லித்தானி ஆற்று பகுதியை ஒட்டி முகாமிட்டுள்ள படையினரை திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் போர் நிறுத்த ஒப்பந்தம் வாபஸ் பெறப்படும்' என ஹிஸ்புல்லாவுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் காசா பகுதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே, கடந்தாண்டு அக்டோபரில் இருந்து போர் நடந்து வருகிறது. அண்டை நாடான லெபனானில் இருந்து இயங்கும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு, ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக, இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தி வந்தது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடான பிரான்ஸ் முயற்சிகள் மேற்கொண்டன.
இதன் படி, இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையே கடந்த நவம்பர் 27ம் தேதி போர் நிறுத்தம் மேற்கொள்ளப் பட்டது. அதன்படி தெற்கு லெபானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் உடனடியாக ஆயுதங்களை களைந்து விட்டு வெளியேற வேண்டும் என்று கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது, ஹிஸ்புல்லாவுக்கு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, இஸ்ரேல் ராணுவம் கூறியிருப்பதாவது: லெபனான் தெற்கு பகுதியில் உள்ள லித்தானி ஆற்று பகுதியை ஒட்டி முகாமிட்டுள்ள படையினரை திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் போர் நிறுத்த ஒப்பந்தம் வாபஸ் பெறப்படும். வடக்கில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளுக்கு பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்ய விரும்புகிறோம்.
லெபனானில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை செயல்படுத்த விரும்புகிறோம். இஸ்ரேல் ராணுவம் சுதந்திரமாக செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.