பெருவழி பாதை திட்டத்தில் இஸ்ரேல் அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை
பெருவழி பாதை திட்டத்தில் இஸ்ரேல் அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை
ADDED : பிப் 17, 2025 12:37 AM

மியூனிக்: இஸ்ரேல் வழியாக இந்தியா, ஐரோப்பியா மற்றும் அமெரிக்காவை இணைக்கும் மிகப்பெரும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜிடியான் சார் உடன், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார்.
ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் நடக்கும் மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சென்றுள்ளார்.
இந்த மாநாட்டுக்கு இடையே, மேற்காசிய நாடான இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் ஜிடியான் சாரை அவர் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது, மேற்காசியாவில் உள்ள நிலவரம் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அங்குள்ள நிலவரம் குறித்து ஜெய்சங்கர் கேட்டறிந்தார்.
இருதரப்பு உறவுகள் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்தும் இருவரும் விவாதித்தனர்.
கடந்தாண்டு டில்லியில் நடந்த ஜி - 20 மாநாட்டின்போது, இந்தியா, மேற்காசியா, ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் வகையில் பெருவழி பாதை திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
சமீபத்தில் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்தார். அப்போது, இஸ்ரேல் வழியாக இந்தியாவில் இருந்து ஐரோப்பியா மற்றும் அமெரிக்காவை இணைக்கும் திட்டத்தை டிரம்ப் தெரிவித்தார்.
இந்த திட்டம் தொடர்பாக, இஸ்ரேல் அமைச்சருடன் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தியதாக, இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, மேற்காசிய நாடான ஓமனின் மஸ்கட்டில் நடந்த எட்டாவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார்.
கடல்சார் கூட்டாண்மையில் புதிய விடியல் என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் பன்முகத்தன்மை உடையவை. வெவ்வேறு கலாசாரம், அரசியல் போன்றவை நமக்கிடையே உள்ளது. ஆனால், நம்மை ஒன்று சேர்ப்பது, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள அனைவரின் நன்மை.
இதை உணர்ந்து, நாம் அனைவரும் ஒன்று பட்டு செயல்பட்டால், வளர்ச்சி, கடல்சார் வணிகம், கடல்சார் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.