காசாவை முழுமையாக கைப்பற்ற இஸ்ரேல் பிரதமர் அதிரடி முடிவு
காசாவை முழுமையாக கைப்பற்ற இஸ்ரேல் பிரதமர் அதிரடி முடிவு
ADDED : மே 20, 2025 01:02 AM
டெல் அவிவ் : ''புதிய தரைவழி தாக்குதலை துவங்கிய பின், காசாவை இஸ்ரேல் முழு கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரும்,'' என, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே ஓராண்டுக்கு மேலாக மோதல் நீடித்த நிலையில், உலக நாடுகளின் தலையீட்டால் கடந்த ஜனவரியில் முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
ஆறு வார கால போர் நிறுத்தத்தின் போது, இரு தரப்பிலும் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இரண்டாம் கட்ட போர் நிறுத்த பேச்சின் போது, இஸ்ரேல் விதித்த நிபந்தனைகளை ஏற்க ஹமாஸ் தரப்பு மறுத்தது.
இதையடுத்து, காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மூன்று நாட்களில், காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில், 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக காசா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
காசாவில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கடந்த மூன்று மாதங்களாக குறைந்த அளவு உணவு மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தது. புதிதாக பொறுப்பேற்ற போப் லியோ உட்பட உலக நாடுகளின் தலைவர்கள், காசா மக்கள் பட்டினியால் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து எடுத்துரைத்தனர்.
இதையடுத்து, மூன்று மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை, காசாவிற்குள் முழுமையாக அனுமதிக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், சமூக வலைதள பக்கத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது:
ஹமாசுடனான சண்டை தீவிரமாக உள்ளது. நாங்கள் முன்னேறி வருகிறோம். புதிய தரைவழி தாக்குதலை துவங்கிய பின், காசாவின் அனைத்து பகுதிகளையும் கட்டுப்பாட்டில் கொண்டு வருவோம். நாங்கள் போரை கைவிட மாட்டோம். வெற்றியை நோக்கி பயணிப்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.