போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் பிரதமர் மறுப்பு லெபனான் மீது தீவிரமடைகிறது தாக்குதல்
போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் பிரதமர் மறுப்பு லெபனான் மீது தீவிரமடைகிறது தாக்குதல்
ADDED : செப் 28, 2024 08:08 AM

டெல் அவிவ் : 'லெபனானில் ஹிஸ்புல்லா படையினர் மீதான தாக்குதலை நிறுத்த முடியாது. போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இனி செயல் தான் பேசும்; வார்த்தை அல்ல' என, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் படையினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போரில், லெபனானின் ஹிஸ்புல்லா படையினர் காஸாவுக்கு ஆதரவாக களம் இறங்கினர்.
இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல் நடத்தினர். ஹிஸ்புல்லா படையினர் பயன்படுத்தி வந்த, 'பேஜர்' தகவல் தொடர்பு கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறியதில், ஹிஸ்புல்லா படையினர் ஆடிப்போயினர்.
அந்த ஆத்திரத்தில் இஸ்ரேல் மீதான தாக்குதலை ஹிஸ்புல்லா தீவிரப்படுத்தியது. பதிலுக்கு லெபனான் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்த சண்டையில் லெபனானில் 700க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்துள்ளனர்.
இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் விமானப்படை கமாண்டர் முஹம்மது உசேன் சுரூர் உயிரிழந்தார். இவர் ஏமனில் உள்ள ஹவுதி படையினருக்கு பயிற்சி அளித்தவர் என்ற காரணத்தினால், ஹவுதி படையினர் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தினர்.
தரைவழி பாய்ந்த ஹவுதி ஏவுகணைகளை இஸ்ரேல் ராணுவம் முறியடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், லெபனானில் தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. எனவே, லெபனான் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயரும்படி, மொபைல் போன், துண்டு பிரசுரங்கள் வாயிலாகவும், அபாய ஒலி எழுப்பியும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
காஸாவில் ஏற்பட்டதை போன்ற பயங்கரமான சூழல் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் லெபனான் மக்கள் மிரண்டு போயுள்ளனர்.
இதற்கிடையே, லெபனான் மீதான போரை 21 நாட்களுக்கு நிறுத்தும்படி அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலிடம் கோரிக்கை வைத்தது.
இதை ஏற்றுக்கொள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இனி செயல் தான் பேசும், வார்த்தை அல்ல என்று தெரிவித்த அவர், போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த ஐ.நா., பொதுச்சபை கூட்டத்தில் நேற்று பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ''நாங்கள் அமைதியையே விரும்புகிறோம். ஆனால், எங்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்தும் எதிரிகளிடமிருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது.
''தினம் தோறும் எங்கள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்துவதை சகித்துக் கொண்டிருக்க முடியாது. ஹிஸ்புல்லா அமைப்பினரை முழுமையாக அழிக்கும் வரை எங்களின் நடவடிக்கை தொடரும்,'' என்றார்.
துல்லிய தாக்குதல்
இஸ்ரேல் ராணுவம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், 'லெபனானின் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் தலைமையகத்தை குறிவைத்து துல்லிய தாக்குதல் நடத்தினோம். இதில், அவர்களுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டது' என, தெரிவித்துள்ளது.