'எனக்கு நோபல் பரிசு மறுக்கப்பட்டால் அது அமெரிக்காவுக்கே அவமானம்': டிரம்ப் அடம்
'எனக்கு நோபல் பரிசு மறுக்கப்பட்டால் அது அமெரிக்காவுக்கே அவமானம்': டிரம்ப் அடம்
ADDED : அக் 02, 2025 12:04 AM

நியூயார்க்:''கடந்த எட்டு மாதங்களில் ஏழு போர்களை நிறுத்தியுள்ள எனக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை என்றால், அது அமெரிக்காவுக்கே மிகப்பெரிய அவமானம்,'' என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், விர்ஜீனியாவின் குவான்டிகோ நகரில் ராணுவ அதிகாரிகளுடன் நடந்த நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் உரையாற்றினார்.
அதில் அவர் பேசிய தாவது:
இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்தும் முயற்சியின் இறுதி கட்டத்தில் உள்ளோம். ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லையெனில், அது அவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும்.
போர் நிறுத்தத்திற்கு அனைத்து அரபு நாடுகளும், முஸ்லிம் நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது. இந்த திட்டம் வெற்றியடைந்தால், எட்டு மாதங்களில் எட்டு போர்களை முடித்து வைத்தவனாக இருப்பேன்.
இதை போல் யாரும் செய்ததில்லை. இதற்காக எனக்கு நோபல் பரிசு கொடுப்பரா என தெரியவில்லை; பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 'டிரம்ப் எப்படி போரை நிறுத்தினார்' என்று புத்தகம் எழுதுபவருக்கு அதை தந்து விடுவர். பொதுவாக எழுத்தாளர்களுக்கே நோபல் பரிசு செல்கிறது.
எனக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை என்றால், அது அமெரிக்காவுக்கே அவமானம். காசா போரை நிறுத்தினால் நோபல் பரிசு கிடைக்கும் என நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.