பொருளாதார மீட்சிக்கான உதவி தொடரும் இலங்கை அதிபரிடம் ஜெய்சங்கர் உறுதி
பொருளாதார மீட்சிக்கான உதவி தொடரும் இலங்கை அதிபரிடம் ஜெய்சங்கர் உறுதி
ADDED : அக் 05, 2024 01:32 AM

கொழும்பு,
ஒரு நாள் பயணமாக இலங்கை சென்ற நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டின் புதிய அதிபர் அனுர குமாரா திசநாயகேவை சந்தித்து பேசினார். அப்போது, “இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும்,” என உறுதியளித்தார்.
நம் அண்டை நாடான இலங்கையில் சமீபத்தில் நடந்த தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுர குமாரா திசநாயகே வெற்றி பெற்று, கடந்த மாதம் 23ல் அதிபராக பதவி ஏற்றார். புதிய அதிபரை சந்திக்கும் நோக்கில் நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஒரு நாள் பயணமாக நேற்று இலங்கை சென்றார்.
ஒத்துழைப்பு
இலங்கை வெளியுறவுத்துறை செயலர் அருணி விஜேவர்தன மற்றும் இலங்கைக்கான இந்திய துாதர் சந்தோஷ் ஜா ஆகியோர் கொழும்பு விமான நிலையத்தில் ஜெய்சங்கரை வரவேற்றனர்.
பின், அதிபர் அனுர குமாரா திசநாயகேவை சந்தித்து ஜெயசங்கர் பேசினார். அப்போது, நம் ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி சார்பில், புதிய அதிபருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
சந்திப்பு குறித்து ஜெய்சங்கர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், 'இருநாடு மற்றும் பிராந்திய மக்களின் நலனுக்காக இந்தியா- - இலங்கை உறவு மற்றும் தற்போதைய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்கப்பட்டன' என, குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் திசநாயகே வெளியிட்டுள்ள பதிவில், 'சுற்றுலா, எரிசக்தி, முதலீடு ஆகியவற்றில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து விவாதித்தோம். இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியாவின் ஆதரவை ஜெய்சங்கர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
பிரதமருடன் சந்திப்பு
மீன்பிடி, பாதுகாப்பு மற்றும் தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றில் தொடர்ச்சியான ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்தும் விவாதிக்கப்பட்டது' என, குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் உடனான சந்திப்பை தொடர்ந்து, இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியாவையும் அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
அதன் பின், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் விஜிதா ஹெராத்தை சந்தித்த ஜெய்சங்கர், இந்தியா- - இலங்கை கூட்டுறவின் பல்வேறு பரிமாணங்களை மதிப்பாய்வு செய்தார். இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவையும் சந்தித்துப் பேசினார்.