உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்கா - ரஷ்யா இடையே பேச்சு பயணத்தை ஒத்தி வைத்தார் ஜெலன்ஸ்கி
உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்கா - ரஷ்யா இடையே பேச்சு பயணத்தை ஒத்தி வைத்தார் ஜெலன்ஸ்கி
ADDED : பிப் 19, 2025 02:59 AM

ரியாத்,இரு தரப்பு உறவை மேம்படுத்துவது குறித்தும், உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்துவது தொடர்பாகவும், ரஷ்யாவுடன் அமெரிக்காவின் பேச்சு துவங்கியுள்ளது.
ஆனால், தங்களுடைய தரப்புடன் பேசாமல், முடிவுகளை திணிக்கக் கூடாது என, ரியாத் செல்லும் பயணத்தை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ஒத்தி வைத்துள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே, 2014ல் இருந்து மோதல் இருந்து வருகிறது. கடந்த, 2022 பிப்.,ல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. மூன்று ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில், போர் நீடித்து வருகிறது.
இந்தப் போரைத் தொடர்ந்து ரஷ்யா மீது, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன. இதனால், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுடனான ரஷ்யாவின் உறவு பாதிக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில், மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் முயற்சியால், அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே பேச்சு ஏற்பட்டது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமீபத்தில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் பேசினார். இதைத் தொடர்ந்து, உக்ரைன் மீதான போரை நிறுத்துவது தொடர்பான விவாதம் துவங்கியது.
இந்த சூழ்நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், சவுதி அரேபியாவின் ரியாத்தில் சந்தித்து பேசி வருகின்றனர்.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ், அமெரிக்கத் துாதர் ஸ்வீட் விட்கோவ் உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் இடம்பெற்றிருந்தனர். சவுதி அரேபியாவின் முயற்சியில் நடந்த இந்த பேச்சு, 5 மணி நேரம் நீடித்தது.
அப்போது மூன்று முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. முதலில் இரு தரப்பு உறவுகளில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக பேசப்பட்டது.
உக்ரைன் மீதான போரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் துவங்குவது, அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையேயான பொருளாதார ஒத்துழைப்புகளை மீண்டும் புதுப்பிப்பது ஆகியவை தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டன.
இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, ரியாத் செல்வதாக இருந்தது. ஆனால், தங்களுடைய தரப்பு வாதங்களை கேட்காமல், முடிவுகளை திணிப்பதை ஏற்க முடியாது என, அவர் நேற்று கூறியுள்ளார். மேலும், தன் பயணத்தை அவர் ஒத்தி வைத்துள்ளார்.