பட்டதெல்லாம் போதும்; பயந்து ஓடினார் டிரம்ப்; விவாத அழைப்பு நிராகரிப்பு
பட்டதெல்லாம் போதும்; பயந்து ஓடினார் டிரம்ப்; விவாத அழைப்பு நிராகரிப்பு
ADDED : செப் 22, 2024 08:55 AM

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தனது ஜனநாயக கட்சியின் போட்டியாளரான கமலா ஹாரிசுடன் 2வது அதிபர் விவாதத்தில் பங்கேற்க மறுப்பு தெரிவித்துவிட்டார். முதல் விவாதத்தில் கமலா ஹாரிஸ் தான் வெற்றியாளர் பல அமெரிக்க ஊடகங்கள் அறிவித்ததால், தற்போது டிரம்ப் நழுவி விட்டார்.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ.,5ம் தேதி நடக்க உள்ளது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, வேட்பாளராக போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ், 59, போட்டியிடுகிறார்.
இருவரும் முதன்முறையாக செப்., 11ல், பிலடெல்பியா நகரில் ஏ.பி.சி., செய்தி நிறுவனம் நடத்திய விவாதத்தில் பங்கேற்றனர். இந்த விவாதத்தில் கமலா ஹாரிஸ் தான் வெற்றியாளர் என அந்நாட்டு ஊடகங்களில் கணிப்புகள் வெளியாகியுள்ளன. டிரம்ப் ஆதரவாளர்களே கமலா தான் வெற்றி பெற்றார் என்று கூறுகின்றனர்.
2வது விவாதம்
இந்நிலையில், அமெரிக்க துணை ஜனாதிபதியும், அதிபர் தேர்தலுக்கான ஜனநாயக கட்சி வேட்பாளருமான கமலா ஹாரிஸ், அக்டோபர் 23ம் தேதி குடியரசுக் கட்சியின் போட்டியாளரான டொனால்டு டிரம்புடன் 2வது விவாதத்தில் பங்கேற்க CNNன் அழைப்பை ஏற்றுக்கொண்டேன் என தெரிவித்தார். ஆனால், 'நவம்பர் 5ம் தேதி நடக்க உள்ள அதிபர் தேர்தலில் ஓட்டளிக்க வாக்காளர்கள் தயாராகி விட்டனர். 2வது விவாதம் மிகவும் தாமதமாகிவிட்டது' எனக் கூறி டிரம்ப் அழைப்பை நிராகரித்தார்.
நழுவினார் டிரம்ப்
'கமலாவை எளிதில் வெற்றி கொள்வேன் என தம்பட்டம் அடிக்கும் டிரம்ப், கமலாவை தாறுமாறாக விமர்சனம் செய்கிறார். 'இவ்வளவு காலம் இந்தியர் என்று கூறி வந்தவர், இப்போது கருப்பர் என தன்னை அடையாளப்படுத்துகிறார்' என்றும் கமலா பற்றி டிரம்ப் கூறியிருந்தார். முதல் விவாதத்தில் கமலா ஹாரிஸ் தான் வெற்றியாளர் பல அமெரிக்க ஊடகங்கள் அறிவித்ததால், தற்போது டிரம்ப் பயந்து நழுவி ஓடிவிட்டார் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.