முதல் நாள் முதல் கையெழுத்து; மாற்றம்; முன்னேற்றம்; கமலா ஹாரிஸ்! எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குதே!
முதல் நாள் முதல் கையெழுத்து; மாற்றம்; முன்னேற்றம்; கமலா ஹாரிஸ்! எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குதே!
UPDATED : ஆக 30, 2024 10:38 AM
ADDED : ஆக 30, 2024 10:33 AM

வாஷிங்டன்; 'நான் அதிபரானால் நடுத்தர மக்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதே முக்கிய இலக்காக இருக்கும்' என்று, கமலா ஹாரிஸ் கூறி உள்ளார்.
அதிபர் தேர்தல்
உலக நாடுகள் உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடைபெறுகிறது. குடியரசு கட்சி வேட்பாளாராக மாஜி அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சியின் சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் களம் காண்கிறார். இருதரப்பினரும் தங்கள் வலுவான பிரசாரங்களை முன் வைத்து மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். கருத்துக்கணிப்பு
அதிபராக வெற்றி பெறும் வாய்ப்பு கமலா ஹாரிசுக்கு உள்ளதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. மக்கள் ஆதரவு அவருக்கு அதிகம் உள்ளதாகவும் சர்வதேச அளவில் தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்க குடியேற்றம் பற்றி தமது நிலைப்பாடில் அவர் மாறுபட்ட கருத்துகளை பிரசாரத்தில் கூறி வந்ததாக தெரிகிறது.பேட்டி
இந்நிலையில் அதிபராக வென்றால் தாம் உடனடியாக செய்ய வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் என்ன என்பதை பற்றி பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் கமலா ஹாரிஸ் கூறி உள்ளதாவது; அமெரிக்காவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே எனது நோக்கம். அதில் தான் அதிக கவனம் செலுத்துவேன். நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதே எனது முதல் இலக்கு.ஒப்பந்தம்
காலநிலை மாறுபாடு என்பது அதி முக்கிய மற்றும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். பசுமை புதிய ஒப்பந்தம் மிகவும் நெருக்கடியான மற்றும் முக்கியமான ஒன்று. எல்லைகளை பாதுகாக்க வேண்டும், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதில் நான் ஏற்கனவே கூறிய விஷயங்களில் இருந்து எந்த மாற்றமும் இல்லை.பொருளாதாரம்
பிரச்னைகளை எப்படி எதிர்கொண்டால் தீர்வு காணலாம் என்பதில் ஒருமித்த கருத்தை எட்டுவது, அதை புரிந்து கொள்வது மிகவும் முக்கியமான ஒன்று. பொருளாதாரத்தை மீட்டு விட்டாலும், அதை மேலும் சிறப்பாக்க நிறைய விஷயங்கள் செய்ய வேண்டி இருக்கிறது.முக்கிய முடிவு
இஸ்ரேல் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். அதற்கான ஒப்பந்தமும் ஏற்படுத்தப்பட வேண்டும். தேர்தலுக்கு இன்னமும் 68 நாட்கள் இருக்கின்றன. வெவ்வேறு விதமாக கோணங்களில் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான கருத்துகளை ஏற்றுக் கொள்வது, பரிசீலிப்பது மிகவும் முக்கியம்.
பாலினம், நிறவேறுபாடு என எதிலும் பாகுபாடு காட்டாமல் அனைத்து தரப்பினருக்கும் ஒரு சிறந்த அதிபராக பரிணமளிக்க முடியும் என்று நினைக்கிறேன். அதனால் தான் நான் வேட்பாளராக நிற்கிறேன்.
இவ்வாறு கமலா ஹாரிஸ் கூறினார். 'கமலா ஹாரிஸ் தேர்தலுக்காக தன்னை கறுப்பினத்தவராக காட்டிக்கொள்கிறார்' என்ற டிரம்பின் குற்றச்சாட்டு பற்றி பேட்டியில் கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்வியை பொருட்படுத்தாத கமலா, 'இதெல்லாம் பல முறை சொல்லப்பட்ட, மிகவும் பழைய, தேய்ந்து போன புகார்; அடுத்த கேள்விக்கு வாங்க' என்றார். 'அவ்வளவு தானா' என்று மீண்டும் கேட்டபோது, 'அவ்வளவு தான் பதில்' என்று முடித்துக் கொண்டார்.