காத்தடிக்குது… காத்தடிக்குது… கமலா ஹாரிஸ் திட்டத்துல காசிமேடு காத்தடிக்குது: 40 லட்சம் குடும்ப ஓட்டுக்கு குறி!
காத்தடிக்குது… காத்தடிக்குது… கமலா ஹாரிஸ் திட்டத்துல காசிமேடு காத்தடிக்குது: 40 லட்சம் குடும்ப ஓட்டுக்கு குறி!
ADDED : ஆக 16, 2024 07:06 AM

நியூயார்க்: அமெரிக்காவில் அதிபர் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், ஜனநாயக் கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ் சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளார்.
உலக நாடுகளே எதிர்பார்த்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் 3 மாதங்களில் நடைபெற இருக்கிறது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். ஆளும் ஜனநாயக் கட்சியின் சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், இருவரும் ஒருவரை ஒருவர் சாடி வருகின்றனர்.
கமலா அலை
ஜோ பைடன் தேர்தல் போட்டியில் இருந்த வரை டிரம்ப் முன்னிலை வகித்திருந்தார். ஆனால், கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, ஜனநாயகக் கட்சியின் ஆதரவு மெல்ல மெல்ல அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 10 சதவீதம் பேர் மாற்றுக் கட்சிக்கு வாக்களிக்கப் போவதாக கூறி வந்த நிலையில், அது தற்போது 6 சதவீதமாக குறைந்துள்ளது.
ஆதரவு குறைவு
தற்போதைய சூழலில் டிரம்ப்பின் குடியரசு கட்சியைச் சேர்ந்த வாக்காளர்கள் மாற்றுக் கட்சியை நோக்கி செல்ல இருப்பதாகவும், இதனால் டிரம்ப்புக்கான ஆதரவு குறையும் என்று அமெரிக்காவின் பிரபல முதலீட்டு வங்கியான கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
வீட்டுக்கு மானியம்
இந்த நிலையில், அமெரிக்க மக்களை கவரும் விதமாக, ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளார். அதாவது, முதல்முறையாக வீடு வாங்கும் மக்களுக்கு ரூ.21 லட்சம் வரையில் மானியம் வழங்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
சூப்பர் அறிவிப்பு
அதாவது, வீடில்லாதவர்கள் பயனடையும் விதமாக, குறைந்த விலையில் வீடு கட்டித்தர திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 30 லட்சம் வீடுகள் கட்டி கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, முன்வரும் கட்டுமான நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகள் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்காக ரூ.246 கோடி மாகாண நிர்வாகங்களுக்கு ஒதுக்கப்படும்.
அதுமட்டுமில்லாமல், பொருளாதாரத்தின் பின்தங்கிய, முதல்முறை வீடு வாங்குபவர்களுக்கு ரூ.21 லட்சம் வரையில் முன்தொகையாக செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டங்களின் மூலம் 40 லட்சம் பேர் பயன்பெறுவர் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
அமெரிக்கர்களுக்கு மட்டும்
கடந்த 2 ஆண்டுகளாக வீட்டு வாடகையை முறையாக செலுத்திய அமெரிக்கர்களே, இந்த திட்டத்தில் பயனடைய தகுதியானவர்கள்.
இந்தியாவின் உந்துதல்
கமலா ஹாரிஸ் முடிவு செய்துள்ள இந்த திட்டம் போலவே, இந்தியாவில் ஏற்கனவே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலாவுக்கு அந்த திட்டங்கள் உந்துதலை தந்திருக்கவும் வாய்ப்புள்ளது.
கமலா ஹாரிஸின் இந்த வீட்டு வசதித்திட்ட அறிவிப்பு அமெரிக்க மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப்புக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.