ADDED : ஜன 14, 2025 04:50 AM

மாஸ்கோ: உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய படையில் இணைந்து பணியாற்றிய கேரளாவை சேர்ந்த, 32 வயது இளைஞர் உயிரிழந்ததை அந்நாட்டில் உள்ள இந்திய துாதரகம் உறுதி செய்துள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இரண்டு ஆண்டுகளை கடந்தும் போர் நீடித்து வரும் சூழலில், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக துணை நிற்பதுடன், ஆயுத உதவிகளையும் வழங்கி வருகின்றன.
இந்நிலையில், ரஷ்யாவில் வசிக்கும் வெளிநாட்டினரை அந்நாட்டு ராணுவம், உக்ரைனுக்கு எதிரான போரில் சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தது.
எனினும், தங்களின் பண தேவைக்காக ரஷ்ய ராணுவத்தில் சில இளைஞர்கள் இணைந்து பணியாற்றி வருவதாக தொடர்ந்து குற்றசாட்டுகள் எழுகின்றன.
இதில், கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தின் வடக்கஞ்சேரியைச் சேர்ந்த பினில், 32, என்பவர், தன் மனைவி ஜாய்சியுடன் மாஸ்கோவில் வசித்து வந்தார்.
அவர்கள் நாடு திரும்ப முடிவு செய்தனர். ஆனால், உக்ரைனுக்கு எதிரான போரில் பினில் மற்றும் அவரது உறவினர் ஜெயின், 27, ஆகியோரை வலுகட்டாயமாக ரஷ்ய ராணுவம் பங்கேற்க செய்ததாக கூறப்படுகிறது.
சமீபத்தில், உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் பினில், சம்பவ இடத்திலேயே பலியானர். அவரது உறவினர் ஜெயின், படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மாஸ்கோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை, அங்குள்ள இந்திய துாதரகமும் உறுதிப்படுத்தியுள்ளது.