கனடா சீக்கிய குருத்வாராவில் காலிஸ்தான் துாதரகம் திறப்பு
கனடா சீக்கிய குருத்வாராவில் காலிஸ்தான் துாதரகம் திறப்பு
ADDED : ஆக 06, 2025 01:53 AM

சர்ரே: கனடாவின், சீக்கிய குருத்வாரா வளாகத்தில் 'காலிஸ்தான் துாதரகம்' திறக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நம் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தை தனியாக பிரித்து, காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாடு உருவாக்கும் நோக்கோடு செயல்படுபவர்கள் காலிஸ்தான் பயங்கரவாதிகள்.
இந்தியாவில் காலிஸ்தான் இயக்கம் ஒடுக்கப்பட்டதால், வட அமெரிக்க நாடான கனடா மற்றும் அமெரிக்காவில் இருந்து அதன் ஆதரவாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக கனடாவில் இந்த பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள், இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். ஹிந்து கோவில்கள் மீது தாக்குதல், இந்தியர்கள் மீது தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், அரசியல் லாபத்துக்காக, காலிஸ்தான் பயங்கரவாதிகள் மீது எந்த நடவடிக்கையும் கனடா அரசு எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இந்த நிலையில், அதை மெய்ப்பிக்கும் வகையில், 'காலிஸ்தான் குடியரசு' என்று எழுதப்பட்ட பலகையுடன் கூடிய துாதரகம் ஒன்று, சர்ரே பகுதியில் உள்ள குருத்வாரா வளாகத்தின் ஒரு கட்டடத்தில் திறக்கப்பட்டுள்ளது.
துாதரகம் அமைக்கப்பட்டுள்ள கட்டடம் பிரிட்டிஷ் கொலம்பியா அரசால் வழங்கப்பட்ட நிதியில் கட்டப்பட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
கடந்த, 2023ல் காலிஸ்தான் பயங்கரவாதி ஹரிதீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தியா மீது குற்றஞ்சாட்டினார். இந்த குருத்வாராவின் தலைவராக நிஜ்ஜார் இருந்தார்.