முஸ்லிம்கள், தமிழர்களை துாண்டிவிடும் காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங்
முஸ்லிம்கள், தமிழர்களை துாண்டிவிடும் காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங்
UPDATED : பிப் 01, 2025 03:04 AM
ADDED : பிப் 01, 2025 12:19 AM

புதுடில்லி : தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தும்படி, தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் மணிப்பூர் கிறிஸ்துவர்களை காலிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுான் துாண்டிவிடுவதாக மத்திய உள்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தை பிரித்து காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாடு அமைக்கும்படி பல்வேறு தீவிரவாத அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
இவர்களை ஒழிக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதால் இந்த அமைப்புகள் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளன.
நடவடிக்கை
அங்கு இவர்கள் சுதந்திரமாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில், 'சீக்ஸ் பார் ஜஸ்டிஸ்' என்ற தீவிரவாத அமைப்பை நிறுவியவர் குர்பத்வந்த் சிங் பன்னுான். இவரை தேடப்படும் தீவிரவாதியாக மத்திய அரசு 2020ல் அறிவித்தது.
இந்நிலையில், 'சீக்ஸ் பார் ஜஸ்டிஸ்' அமைப்புக்கும், அதன் நிறுவனர் குர்பத்வந்த் சிங் பன்னுானுக்கும் இந்தியா விதித்துள்ள தடை உத்தரவை நீடிப்பது தொடர்பான பரிசீலனையை மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் மேற்கொண்டது.
இதற்காக, புலனாய்வு அமைப்பு ஒன்றை உருவாக்கி, பன்னுான் மற்றும் அவரது அமைப்பு தொடர்பான நடவடிக்கைகளை ஆய்வு செய்து, பின் குறிப்பு தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தது.
புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்த பின் குறிப்பின் அடிப்படையில், 'சீக்ஸ் பார் ஜஸ்டிஸ்' அமைப்பின் மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்த குறிப்பு விபரங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. அந்த குறிப்பில் பல்வேறு பகீர் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
அதன் விபரம்:
தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான, 'சீக்ஸ் பார் ஜஸ்டிஸ்' பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது.
பிற சமூகங்களுக்கு எதிராக சிறுபான்மை சமூகங்களைத் துாண்டி, மக்களை வகுப்புவாத அடிப்படையில் பிளவுபடுத்துவதன் வாயிலாக, இந்தியாவுக்கு எதிரான தங்கள் செயல்பாட்டை வலுப்படுத்த முயற்சிக்கின்றனர்.
பாக்., ஆதரவு
இதன் ஒரு பகுதியாக, மணிப்பூரில் வாழும் கிறிஸ்துவர்களை தனி நாடு கோரிக்கையை வலியுறுத்த துாண்டுகின்றனர்.
திராவிடம் என்ற கோரிக்கை வாயிலாக தமிழகத்தை பிரிக்கவும், முஸ்லிம்கள் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக குரல் எழுப்பி, அவர்களை துாண்டிவிட்டு, 'உருதுயிஸ்தான்' என்ற தனி நாடு கோரிக்கையை வலுப்பெறச் செய்ய சதி செய்கின்றனர்.
இவர்களின் பிரிவினைவாத செயல்களுக்கு தலித் மக்களின் மனதை மாற்றி ஆதரவு கோரும் பணிகளும் நடக்கின்றன.
பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகளை அரசுக்கு எதிராக போராட துாண்டியதிலும் பன்னுான் அமைப்பினருக்கு பங்குள்ளது.
இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்க வன்முறையை துாண்டுவதே, 'சீக்ஸ் பார் ஜஸ்டிஸ்' அமைப்பின் நோக்கம்.
ராணுவம் மற்றும் போலீஸ் துறையில் உள்ள சீக்கியர்களை மூளைச் சலவை செய்து தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவும் முயற்சி நடக்கிறது.
சர்வதேச அளவிலான கேங்ஸ்டர்கள், பயங்கரவாதிகள் மற்றும் காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் பன்னுானுக்கு தொடர்பு உள்ளது. சமீபமாக, பாகிஸ்தான் ஆதரவும் அவர்களுக்கு கிடைத்து உள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.