UPDATED : மே 12, 2024 11:22 AM
ADDED : மே 12, 2024 10:58 AM

ஒட்டாவா: கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே 3 இந்தியர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது 4வதாக ஒரு இந்தியரை கைது செய்துள்ளதாக கனடா போலீசார் கூறியுள்ளனர்.
வட அமெரிக்க நாடான கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரே என்ற பகுதியில் 2023 ஜூன் 18 ல் காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்த நாட்டின் பார்லிமென்டில் குற்றஞ்சாட்டினார். இந்த விவகாரத்தால் கனடா - இந்தியா இடையேயான தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டது.
இக்கொலை வழக்கில், ஆல்பர்ட்டா மாகாணத்தின் எட்மன்டன் என்ற பகுதியில் வசிக்கும் கரன் பிரார்(22), கமல்ப்ரீத் சிங்(22), கரன்ப்ரீத் சிங்(28) ஆகிய மூன்று இந்தியர்களை கனடா போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். அவர்களிடம் அந்த நாட்டின் நீதிமன்றம் விசாரணை நடத்தியது.
இந்நிலையில், இந்த வழக்கில் 4வதாக மற்றொரு இந்தியரை கனடா போலீசார் கைது செய்துள்ளனர். சர்ரே பகுதியில் பிரம்ப்டன் என்ற இடத்தில் வசித்து வந்த அமர்தீப் சிங்(22) என்ற இளைஞரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.