sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

குவைத் தீ விபத்து: தஞ்சாவூர், ராமநாதபுரத்தை சேர்ந்தவர்களும் பலி

/

குவைத் தீ விபத்து: தஞ்சாவூர், ராமநாதபுரத்தை சேர்ந்தவர்களும் பலி

குவைத் தீ விபத்து: தஞ்சாவூர், ராமநாதபுரத்தை சேர்ந்தவர்களும் பலி

குவைத் தீ விபத்து: தஞ்சாவூர், ராமநாதபுரத்தை சேர்ந்தவர்களும் பலி


UPDATED : ஜூன் 13, 2024 04:07 PM

ADDED : ஜூன் 13, 2024 10:28 AM

Google News

UPDATED : ஜூன் 13, 2024 04:07 PM ADDED : ஜூன் 13, 2024 10:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குவைத் சிட்டி: குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இந்தியர்கள் உட்பட 49 பேர் பலியாகினர். இதில் தமிழகத்தின் தஞ்சாவூர், ராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

மேற்காசிய நாடான குவைத்தில் உள்ள மங்காப் நகரில் ஆறு மாடிகளை உடைய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு கட்டுமானப் பணி நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள். தமிழகம், கேரளா மற்றும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இந்த அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் நேற்று (ஜூன் 12) அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது மேல் தளங்களுக்கும் வேகமாக பரவியதை அடுத்து, கட்டடம் முழுதும் தீ பற்றியது.

இதையடுத்து, அப்பகுதியே புகைமண்டலமாக மாறியது. அதிகாலை என்பதால் பெரும்பாலானோர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் மூச்சுத் திணறி பலியாகினர். தீ விபத்தில் இருந்து தப்ப முயன்ற பலர், மாடியில் இருந்து கீழே குதித்ததால் படுகாயம் அடைந்து உயிரிழந்தனர். இந்த விபத்தில் 40 இந்தியர்கள் உட்பட 49 பேர் பலியாகினர்; 50க்கும் மேற்பட்டோர் தீ காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

உயிரிழந்தவர்களில் 25 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. 5 தமிழர்களும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதில் ஒருவர் ராமநாதபுரம் மாவட்டம் தென்னவனூரை சேர்ந்த ராமு என்பது உறுதியாகியுள்ளது. மற்றொருவர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஆதனூர் பகுதியை சேர்ந்த புனாப் ரிச்சர்ட் ராய் எனக் கூறப்படுகிறது. அவரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதாகவும், தொடர்ந்து முயன்றும் தொடர்பு கொள்ள முடியவில்லை, எந்த தகவலும் கிடைக்கவில்லை என குடும்பத்தினர் கவலையுடன் தெரிவித்தனர்.

7 தமிழர்கள்


அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறுகையில், ''குவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்திருக்கலாம் என தகவல் தெரியவந்துள்ளது. ராமநாதபுரம் தென்னவனூரை சேர்ந்த ராமு கருப்பணன், கடலூரை சேர்ந்த சின்னதுரை கிருஷ்ணமூர்த்தி, விழுப்புரத்தை சேர்ந்த முகமது ஷெரீப், ரிச்சர்ட் ராய், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வானரமுட்டியை சேர்ந்த வீராசாமி மாரியப்பன்,சிவசங்கர், ராஜூ எபினேசர் ஆகிய 7 பேர் உயிரிழந்திருக்கலாம் என குவைத் தமிழ் சங்கம் தெரிவித்துள்ளது. ஆனாலும், உயிரிழப்பு பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்களை இந்திய வெளியுறவுத்துறை இன்னும் தெரிவிக்கவில்லை'' என்றார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.Image 1280870

அவசரமாக கூடுகிறது அமைச்சரவை

குவைத்து தீ விபத்தில் 40 இந்தியர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாகவும், மீட்பு பணிகள் குறித்தும் ஆய்வு செய்யும் வகையில், மத்திய அமைச்சரவை இன்று அவசரமாக கூடுகிறது.



கேரள அரசும் அவசர ஆலோசனை

குவைத் தீவிபத்து தொடர்பாக கேரள அமைச்சரவை அவசரமாக கூடி ஆலோசனை நடத்தியது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில், உயிரிழந்தவர்களின் உடலை கேரளா கொண்டு வருவது, மீட்பு பணிகளை ஒருங்கிணைக்க அமைச்சரவை குவைத் அனுப்பி வைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதன் பிறகு அம்மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: உயிரிழந்தவர்களின் உடலுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை மற்றும் உயிரிழந்தவர்களின் உடலை தாயகம் கொண்டு வரும் பணிகளை ஒருங்கிணைக்க மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் குவைத் செல்ல உள்ளார். தற்போது வரை கிடைத்த தகவலின்படி 19 பேர் உயிரிழந்துள்ளனர்.



விரையும் இந்திய விமானப்படை

விபத்து நடந்த பகுதியில் நேரில் ஆய்வு செய்ய வெளியுறவுத்துறை இணையமைச்சர் கே.வி., சிங் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விரைகின்றனர். அங்கு மீட்பு பணிகள் குறித்து தேவையான ஏற்பாடுகளை செய்ய உள்ளனர். விபத்தில் பலியான இந்தியர்களின் உடல்களை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை செய்யப்படும் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும், அனைவரின் உடல்களையும் ஒரே விமானத்தில் கொண்டு வரும் வகையில் இந்திய விமானப்படை விமானம் குவைத் செல்கிறது.



கவர்னர் இரங்கல்

குவைத் தீவிபத்து தொடர்பாக கவர்னர் ரவி வெளியிட்ட இரங்கல் பதிவில் கூறியுள்ளதாவது: குவைத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள் எனக்கூறியுள்ளார்.



தமிழக அரசு ஏற்பு

இந்த தீவிபத்தில் காயமடைந்தவர்களின் மருத்துவ செலவை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. மாநில அயலக தமிழர் நலத்துறை மூலம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.








      Dinamalar
      Follow us