லார்ட்சில் இந்திய அணியை வழிநடத்துவதில் பெருமை: தோனி
லார்ட்சில் இந்திய அணியை வழிநடத்துவதில் பெருமை: தோனி
ADDED : ஜூலை 20, 2011 06:27 PM
லண்டன் : லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணியை வழிநடத்துவதில் பெருமைப்படுவதாக கேப்டன் தோனி கூறினார்.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை துவங்குகிறது. கிரிக்கெட்டின் தாயகம் என்று லார்ட்ஸ் மைதானம் அழைக்கப்படுகிறது. இந்த மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவதை வீரர்கள் பெருமையாக கருதுகின்றனர். இந்த மைதானத்தில் நாளை துவங்கும் போட்டியில் சச்சின் டெண்டுல்கர், டிராவிட், லட்சுமண் ஆகியோர் சதமடிக்க முயற்சி செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் லண்டன் பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ள இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி, லார்ட்ஸ் மைதனாத்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை வழிநடத்துவதில் தனது வாழ்நாள் சாதனைகளை விட பெருமையாக கருதுகிறேன். 15 பேரை வழிநடத்துவதிலும் 1.2 பில்லியன் மக்களின் எதிர்பார்ப்புகளை கொண்ட இந்திய அணியை வழிநடத்துவது மிகப்பெரிய விஷயம். இது பெருமை. தனிப்பட்ட சிறப்பு. ஆனால் அதே நேரத்தில் பொறுப்பு அதிகரிக்கிறது. ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு சாதகமில்லாதது. ஆனால் இந்த எதிர்பார்ப்பு தொடர்ந்து நிலவுகிறது என்று கூறினார்.