லெபனான் பேஜர் குண்டுவெடிப்பு: கேரள வாலிபர் தொடர்பால் அதிர்ச்சி
லெபனான் பேஜர் குண்டுவெடிப்பு: கேரள வாலிபர் தொடர்பால் அதிர்ச்சி
ADDED : செப் 20, 2024 07:58 PM

சோபியா: லெபனான் பேஜர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கேரள வாலிபரை, பல்கேரியா போலீசார் தேடி வருகின்றனர்.லெபனான் நாட்டை தளமாக கொண்டு செயல்படும் ஹிஸ்புல்லா படையினர் மீது ஒரு வாரமாக இஸ்ரேல், நுாதன தாக்குதல் நடத்தி வருகிறது. ஹிஸ்புல்லா படையினர், தங்களது தகவல் தொடர்புக்காக பேஜர் சாதனங்களை பயன்படுத்தி வந்தனர்.
இதன் மூலம் தாக்குதல் நடத்த திட்டமிட்ட இஸ்ரேல் உளவுப்படை, கச்சிதமாக காய் நகர்த்தியது. ஹிஸ்புல்லா குழுவினர் ஆர்டர் செய்திருந்த பேஜர்களில் வெடிகுண்டுகளை நிறுவி, குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கச் செய்தது. தொடர்ந்து, வாக்கி டாக்கி, மொபைல் போன்களும் வெடித்தன.
இந்த தாக்குதலில், இதுவரை 32 பேர் பலியாகினர்; 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.இதில் பேஜர் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல் தான் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கு காரணம், குறிப்பிட்ட அந்த பேஜர்கள், ஐரோப்பிய நாடான பல்கேரியாவில் பதிவு செய்யப்பட்ட நார்டா குளோபல் லிமிடெட் கம்பனி மூலம் விற்கப்பட்டது.இந்த கம்பெனியை பதிவு செய்தவர், 37 வயதான ரின்சன் ஜோஸ். மலையாளியான இவர், கேரள மாநிலம் வயநாட்டில் இருந்து நார்வேக்கு குடிபெயர்ந்தவர். தன் நிறுவனத்தை பல்கேரியாவில் 2022 ஏப்ரலில் பதிவு செய்துள்ளார்.
நார்வே தகவலின்படி, ரின்சன் ஜோஸ், முதலில் வேலைக்கு ஆள் எடுக்கும் நிறுவனத்தை நடத்தி வந்தவர். அவர் மலையாளி மக்களிடம் மிகவும் நேர்மையாக இருந்து மதிப்பு பெற்று கால்பந்து கிளப் நடத்தி வந்தார். பல விழாக்களை முன்னின்று நடத்தியுள்ளார். நார்வே நாட்டில் குடியுரிமை பெற்ற அவர், பத்தாண்டுக்கும் மேலாக அங்கு வசிக்கிறார்.
அவரது குடும்பத்தினர் இன்னும் கேரளாவில் தான் வசிக்கின்றனர். இவரது தந்தை ஒரு டெய்லர். மானந்தாவடியில் டெய்லர் கடையில் வேலை செய்கிறார்.'ரின்சன் ஜோஸ், நடவடிக்கைகள் குறித்து, எங்களுக்கு தெரியாது' என்கிறார்கள் அவரது குடும்பத்தினர்.
இத்தகைய சூழ்நிலையில்தான், பேஜர் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இஸ்ரேலிய உளவுப்படைக்காக, வேலை பார்த்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் ரின்சன் ஜோஸை, நார்வே, பல்கேரியா மற்றும் லெபனான் போலீஸ் படையினர் தேடி வருகின்றனர்.
லெபனான் குண்டு வெடிப்பில் ஜோஸ் தேடப்படும் தகவல் பரவியதும், கேரளாவில் அவரது குடும்பத்தினர், உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.