4,000 பேரை வீட்டுக்கு அனுப்புகிறது லுப்தான்சா விமான நிறுவனம்
4,000 பேரை வீட்டுக்கு அனுப்புகிறது லுப்தான்சா விமான நிறுவனம்
ADDED : செப் 30, 2025 08:30 AM

பெர்லின்; அடுத்த 5 ஆண்டுகளில், 4,000 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக ஜெர்மனி விமான நிறுவனமான 'லுப்தான்சா' தெரிவித்து உள்ளது.
ஐரோப்பிய நாடான ஜெர்மனியைச் சேர்ந்த, மிகப்பெரிய விமான நிறுவனமான லுப்தான்சா. வரும் 2030ம் ஆண்டுக்குள் 4,000 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்து உ ள்ளது.
இந்த பணிநீக்கம் பெரும்பாலும் ஜெர்மனியை சார்ந்து இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையால், நிர்வாகம் மற்றும் செயல்பாடு அல்லாத பணியிடங்களில் இருக்கும் என கூறப்படுகிறது.
விமானிகள், விமானப் பணியாளர்கள், வாடிக்கையாளர் சேவை மற்றும் விமான செயல்பாடுகளுக்கான பணியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அதிகமாக பயன்படுத்தி, சில நிர்வாக பணிகளுக்கான தேவைகளை குறைத்து, செயல்திறனை அதிகரிக்க நிறுவனம் திட்டமிட்டுஉள்ளது.
நிர்வாக செலவுகளை குறைத்து லாபத்தை அதிகரிக்கும் மறுசீரமைப்பு திட்டத்தின் ஒருபகுதியாக இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை நிறுவனம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது, உலகெங்கிலும் இந்நிறுவனத்தில் 1.03 லட்சம் பேர் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. மறுசீரமைப்பு திட்டத்துடன், 2028 முதல் 2030ம் ஆண்டுக்கான புதிய நிதி இலக்குகளையும் லுப்தான்சா நிர்ணயித்துள்ளது. இதன் வாயிலாக 8 முதல் 10 சதவீதம் வரை லாபத்தை அடைவதே அதன் நோக்கமாகும்.