முன்னாள் பிரதமர்களுக்கு அதிர்ஷ்டம்; பிரான்ஸ் அமைச்சரவையில் கிடைத்தது இடம்!
முன்னாள் பிரதமர்களுக்கு அதிர்ஷ்டம்; பிரான்ஸ் அமைச்சரவையில் கிடைத்தது இடம்!
ADDED : டிச 24, 2024 07:20 AM

பாரிஸ்: பிரான்ஸ் புதிய அமைச்சரவையில் இரண்டு முன்னாள் பிரதமர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.
பிரான்ஸ் நாட்டில் மூன்று மாதங்களுக்கு முன் பதவியேற்ற மைக்கேல் பார்னியர் தலைமையிலான அரசுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் நம்பிக்கையில்லா ஓட்டெடுப்பு முன்னெடுக்கப்பட்டது. இதில் ஆளும் கட்சியினர், எதிர்க்கட்சியினர் பலர் ஒன்றிணைந்து அரசுக்கு எதிராக ஓட்டளித்தனர்.
சமீபத்தில், நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்ததால், பிரான்சில் ஆட்சி கவிழ்ந்தது. அவர் புதிய பிரதமரை அறிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். தற்போது, புதிய அரசாங்கத்தை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அறிவித்தார். புதிதாக பிரதமர் பிரான்சுவா பெய்ரூ தலைமையில் அரசு அமைக்கப்பட்டு உள்ளது. வங்கியாளரான எரிக் லோம்பார்ட் புதிய நிதியமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார். செபாஸ்டின் லெகோர்னு பாதுகாப்பு துறை அமைச்சராக நீடிக்கிறார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன் நோயல் பரோட்டும் தனது பதவியை தக்க வைத்துக் கொண்டார். இந்த மாற்றத்தின் மூலம் இரண்டு முன்னாள் பிரதமர்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது.
முன்னாள் பிரதமர் மானுவல் வால்ஸ் வெளிநாட்டு விவகாரங்களுக்கான அமைச்சராக நியமிக்கப்பட்டார். முன்னாள் பிரதமர் எலிசபெத் போர்வ் கல்வித்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் நீதி அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.