பிரான்ஸ் அதிபர் கன்னத்தில் அறைந்தாரா மனைவி? வைரல் வீடியோ
பிரான்ஸ் அதிபர் கன்னத்தில் அறைந்தாரா மனைவி? வைரல் வீடியோ
ADDED : மே 26, 2025 07:03 PM

ஹனோய்: பிரான்ஸ் அதிபர் மேக்ரானை அவரது மனைவி கன்னத்தில் அறையும் வீடியோ சமூக வலைதளத்தில் அதிகம் பேரால் பார்த்து பகிரப்பட்டு வருகிறது.
பிரான்ஸ் நாட்டு அதிபராக உள்ளவர் இமானுவேல் மேக்ரான். இவர் தற்போது இந்தோனேசியா, சிங்கப்பூர், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
வியட்நாம் தலைநகர் ஹனோய் விமான நிலையத்திற்கு மனைவி பிரிஜிட்டி உடன் மேக்ரான் வந்துள்ளார். விமானத்தில் இருந்து இறங்குவதற்கு சில வினாடிகள் முன்னதாக, அதிபரை கன்னத்தில் மனைவி பிரிஜிட்டி அறைவது போன்ற வீடியோ இணையத்தில் பரவலாகி வருகிறது.
விமானத்தின் கதவு திறந்த அடுத்த நொடியே, மேக்ரான் முகத்தை சிவப்பு வண்ண ஆடை அணிந்த ஒரு கை தள்ளுவது போன்ற காட்சிகள் அதில் இடம்பெற்று உள்ளன. அடுத்த சில நிமிடங்களில் சிவப்பு வண்ண ஆடையுடன் மேக்ரான் மனைவி பிரிஜிட்டி வெளியே வரும் காட்சிகளும் உள்ளன.
இந்த வீடியோ உண்மை தானா என்று பலரும் கேள்விகளை முன் வைக்க, உண்மையே, ஒரு நெருக்கமான நிகழ்வு என்று பிரான்ஸ் அதிபர் அலுவலகம் கூறி உள்ளது. இருவருக்கும் இடையே இது ஒரு விளையாட்டாக நடைபெற்ற சண்டை என்றும் விளக்கம் அளித்துள்ளது.
இந்த பளார் அறை வீடியோவானது, ரஷ்ய நாட்டு ஆதரவு பெற்ற சமூக வலைதள பக்கங்களில் வேகமாக பரவி வருகிறது.