UPDATED : ஏப் 01, 2025 03:06 PM
ADDED : ஏப் 01, 2025 01:54 PM

காசா: பாலஸ்தீன காசாவில் இஸ்ரேல் படை நடத்திய தாக்குதலில் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டாலும் சமீபத்தில் குழந்தைகள் பலி அதிகரித்துள்ளதாக யூனிசெப் (United Nations International Children's Emergency Fund) அமைப்பு பெரும் கவலை தெரிவித்துள்ளது.
தெற்கு காசாவில் அல்நாசர் மருத்துவமனையின் புள்ளி விவரப்படி இந்த யூனிசெப் அமைப்பின் சார்பில் வெளியான செய்தி தெரிவிக்கிறது. யூனிசெப் செயல் இயக்குநர் கேத்தரீன் ரூசெல் கூறியிருப்பதாவது:
சமீபத்தில் முடிந்த போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின்னர் மீண்டும் ஆங்காங்கே இரு தரப்பினரும் தாக்குதலை துவக்கி உள்ளனர்.
காசா பகுதியில் கடந்த 10 நாட்களில் 322 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். 609 பேர் காயமுற்று சிகிச்சை பெற்று வருகின்றனர். பல குழந்தைகள் ஆதரவற்று தங்க இடமின்றி தவிப்பதாகவும், பலர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள், மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் நுழைந்து, 2023ம் ஆண்டு அக்டோபரில் தாக்குதல் நடத்தினர்.இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர்; 200 பேரை பிணைக்கைதிகளாக கடத்திச் சென்றனர். இதற்கு பதிலடியாக 15 மாதங்களாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், காசாவில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தெற்கு மற்றும் மத்திய காசா பகுதிகளில் இஸ்ரேல் படையினர் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.