வங்கதேச இடைக்கால அரசு தலைவர் முகமது யூனுஸ் பிரிவினைவாத தலைவருடன் சந்திப்பு: கிளம்பியது புது சர்ச்சை!
வங்கதேச இடைக்கால அரசு தலைவர் முகமது யூனுஸ் பிரிவினைவாத தலைவருடன் சந்திப்பு: கிளம்பியது புது சர்ச்சை!
ADDED : செப் 03, 2024 10:16 AM

டாக்கா: வங்கதேச இடைக்கால அரசு தலைவர் முகமது யூனுஸ், முஸ்லிம் மத பிரிவினைவாதி தலைவர் மமுனுல் ஹக்-ஐ சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இட ஒதுக்கீடு தொடர்பாக, மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது. வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு, நாட்டை விட்டு வெளியேறினார். நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ், 84, தலைமையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது.
சந்திப்பு
சமீபத்தில், அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வங்க பவனில் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பதவி ஏற்றார். இந்நிலையில், டாக்காவில் முகமது யூனுஸ், முஸ்லிம் மத பிரிவினைவாதி தலைவர் மமுனுல் ஹக் மற்றும் அவரது குழு உறுப்பினர்களை சந்தித்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளன.
யார் இந்த மமுனுல் ஹக்?
ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சிக் காலத்தில் மமுனுல் ஹக், வன்முறையைத் தூண்டியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டார். தற்போது ஷேக் ஹசீனா நாட்டை விட்டு, வெளியேறியதும் இடைக்கால அரசு, மமுனுல் ஹக் மற்றும் பிற பயங்கரவாத அமைப்பு தலைவர்களை விடுவித்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய இஸ்லாமியக் கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி மீதான தடையையும் இடைக்கால அரசு நீக்கியது. தற்போது வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன. இந்த சூழலில், பிரிவினைவாதி உடன் முகமது யூனுஸ் சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இணையதளத்தில் விவாதம் கிளம்பி உள்ளது.