மெக்சிகோ கடற்படை கப்பல் விபத்தில் சிக்கியது: 2 பேர் உயிரிழப்பு; 19 பேர் காயம்
மெக்சிகோ கடற்படை கப்பல் விபத்தில் சிக்கியது: 2 பேர் உயிரிழப்பு; 19 பேர் காயம்
UPDATED : மே 18, 2025 12:32 PM
ADDED : மே 18, 2025 10:20 AM

நியூயார்க்: மெக்சிகோ கடற்படைக் கப்பல் புரூக்ளின் பாலத்தில் மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்து 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 19 பேர் காயம் அடைந்துள்ளனர்.
நியூயார்க் நகரின் புரூக்ளின் பாலத்தில், நேற்றிரவு மெக்சிகோ நாட்டு கடற்படைக் கப்பல் விபத்தில் சிக்கியது. விபத்து குறித்து, நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கப்பலில் இருந்த 277 பேரில், 19 பேர் காயமடைந்தனர்.
அவர்களில் 2 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். மேலும் 2 பேர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார். குவாஹ்டெமோக் என்ற கப்பல், பாலத்தின் அடியில் பின்னோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, விபத்து ஏற்பட்டுள்ளது. இணையத்தில், பரவி வரும் வீடியோவில் கப்பல் பாலத்தின் அடியில் மோதும் காட்சி இடம்பெற்றுள்ளது.
விபத்து நடந்த, புரூக்ளின் பாலத்தில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இது ஒரு முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது.