படையெடுப்பை எதிர்கொள்ள தயாராக இருங்கள் ; அதிகாரிகளை உஷார்படுத்தும் கிரீன்லாந்து பிரதமர்
படையெடுப்பை எதிர்கொள்ள தயாராக இருங்கள் ; அதிகாரிகளை உஷார்படுத்தும் கிரீன்லாந்து பிரதமர்
ADDED : ஜன 21, 2026 09:52 AM

நமது நிருபர்
அமெரிக்க அதிபர் டிரம்பின் கையகப்படுத்தும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், ''ராணுவ மோதலை நிராகரிக்க முடியாது. மக்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும்'' என கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ் ப்ரெட்ரிக் நீல்சன் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப் பெரிய தீவு நாடான கிரீன்லாந்து ஆர்டிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ளது, . ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் ஒரு பகுதியான இது, தன்னாட்சி அதிகாரம் பெற்றது. பாதுகாப்பு காரணங்களை கூறி, ஏதேனும் ஒரு வழியில் கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்கா கிரீன்லாந்தை சொந்தமாக்க வேண்டும் என்று டிரம்ப் பலமுறை கூறியுள்ளார். அவர் கிரீன்லாந்து தீவில் அமெரிக்க கொடியுடன் நிற்பது போல படத்தைப் பகிர்ந்து கொண்டார். இதற்கு எதிர்வினையாக, கிரீன்லாந்தில் தனது ராணுவ பாதுகாப்பை டென்மார்க் அதிகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ் ப்ரெட்ரிக் நீல்சன் கூறியதாவது: ராணுவ மோதல் ஏற்படாது என்று யாரும் முற்றிலும் நிராகரிக்க முடியாது. மக்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். ராணுவ படையெடுப்பை எதிர்கொள்ள அதிகாரிகள் தயாராக வேண்டும். அத்தகைய சூழ்நிலை இன்னும் சாத்தியமில்லை என்றாலும். அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் எந்தவொரு இடையூறுகளுக்கும் மக்கள் தயாராக இருக்க வேண்டும்.
முக்கிய உள்ளூர் அதிகாரிகளின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு பணிக்குழுவை கிரீன்லாந்து அரசு அமைக்கும். குறைந்தது ஐந்து நாட்களுக்கு போதுமான உணவை சேமித்து வைப்பதற்கான ஆலோசனை உட்பட, பொதுமக்களுக்கு புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கிரீன்லாந்தின் நிதியமைச்சரும், முன்னாள் பிரதமருமான மியூட் எகெட் கூறுகையில், ''அதிகரித்து வரும் அழுத்தத்தை எதிர்கொள்வதற்கும், அனைத்து சூழ்நிலைகளுக்கும் தயாராக இருக்க வேண்டும்'', என்றார்.
இதற்கிடையில், பிப்ரவரி 1ம் தேதி முதல் எட்டு நேட்டோ நட்பு நாடுகள் மீது புதிய வரிகளை விதிக்கப் போவதாக டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார் , இது அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான பதட்டங்களை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

