பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு காட்டும் கனடா மீது அமைச்சர் ஜெய்சங்கர் புகார்
பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு காட்டும் கனடா மீது அமைச்சர் ஜெய்சங்கர் புகார்
ADDED : நவ 06, 2024 01:35 AM

கான்பெரா, 'கனடாவில் உள்ள ஹிந்து கோவிலில், பக்தர்கள் மீது காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல், அங்குள்ள பிரிவினைவாத அமைப்புகளுக்கு அரசியல் ரீதியில் அளிக்கப்பட்டுள்ள ஆதரவையே காட்டுகிறது,'' என, நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு தொடர்பான விவகாரத்தில், வட அமெரிக்க நாடான கனடா மற்றும் நம் நாட்டுக்கு இடையேயான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கனடாவின் பிராம்ப்டன் பகுதியில் உள்ள ஹிந்து கோவிலில், பக்தர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் சமீபத்தில் தாக்குதல் நடத்தினர்.
இதற்கு, நம் வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும், பிரதமர் நரேந்திர மோடியும், 'இந்த விவகாரத்தில், கனடாவிடம் இருந்து நியாயத்தை எதிர்பார்க்கிறோம்' என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அங்கு நடந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில் கூறியதாவது:
கனடாவுடான உறவில் மூன்று முக்கிய கேள்விகள் எழுந்துள்ளன. முதலில், எவ்வித ஆதாரங்களும் அளிக்காமல் இந்தியா மீது பொய் குற்றச்சாட்டுகளை கூறியது. அடுத்தது, அங்குள்ள இந்திய துாதரக அதிகாரிகள் கண்காணிக்கப்படுவது ஏற்புடையதல்ல.
தற்போது கோவிலில் நடத்தப்பட்ட தாக்குதலும் முக்கிய பிரச்னையாக உள்ளது. இதிலிருந்து, பயங்கரவாதத்தில் ஈடுபட்ட பிரிவினைவாத அமைப்புக்கு அங்கு அரசியல் ரீதியில் ஆதரவு அளிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.