நேபாளத்துக்கு ரூ.623 கோடி நிதியுதவி அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்
நேபாளத்துக்கு ரூ.623 கோடி நிதியுதவி அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்
ADDED : ஜன 07, 2024 02:49 AM
காத்மாண்டு,:நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அண்டை நாடான நேபாளம் சென்றுள்ளார்.
அந்நாட்டு பிரதமர் பிரசண்டாவை சந்தித்த அவர், நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கு 10,000 மெகாவாட் மின்சாரத்தை, அடுத்த 10 ஆண்டுகளுக்கு வழங்குவது உள்ளிட்ட சில ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.
அதைத் தொடர்ந்து, அமைச்சர் ஜெய்சங்கர், காத்மாண்டுவில் உள்ள நுாற்றாண்டு பழமையான சிவன் கோவிலான பசுபதிநாதர் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அப்போது, அங்கு ருத்ராட்ச மரக்கன்றையும் நட்டார்.
பின், 2015ல் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட திரிபுவன் பல்கலையின் மத்திய நுாலகம் மற்றும் பல்வேறு மேம்பாட்டு திட்டங்களை, நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் சவுத்துடன் இணைந்து ஜெய்சங்கர் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:
நேபாளத்தின் மேற்கு பகுதியில் கடந்த ஆண்டு நவம்பரில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவு குறித்து அறிந்து இந்தியா மிக கவலை அடைந்தது.
அப்போது பிரதமர் மோடி நேபாளத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தார்.
இதன் தொடர்ச்சியாக, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சீரமைப்பு மற்றும் கட்டுமான பணி மேற்கொள்வதற்காக, 623 கோடி ரூபாயை இந்திய அரசு வழங்க உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.