பாகிஸ்தான் பிரதமருடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு
பாகிஸ்தான் பிரதமருடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு
ADDED : அக் 16, 2024 02:57 AM

இஸ்லாமாபாத், எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு சென்றுஉள்ள நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீபை நேற்று சந்தித்தார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு இன்று நடக்கிறது. இதில் பங்கேற்க நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அந்நாட்டுக்கு சென்றுள்ளார். இஸ்லாமாபாத் விமான நிலையத்தில், நேற்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, இஸ்லாமாபாதில் எஸ்.சி.ஓ., உறுப்பு நாடுகளுக்கு, பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நேற்று இரவு விருந்து அளித்தார்.
இதில் பங்கேற்ற நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை, அவர் கைகுலுக்கி வரவேற்றார். அப்போது, இருவரும் சில நிமிடங்கள் உரையாடியதாகக் கூறப்படுகிறது.
ஜம்மு - காஷ்மீர் உட்பட பல்வேறு விவகாரங்களில், இந்தியா - பாக்., இடையே பல ஆண்டுகளாக பிரச்னை நீடிக்கும் நிலையில், ஒன்பது ஆண்டுகளுக்கு பின், பாகிஸ்தானுக்கு அமைச்சர் ஜெய்சங்கர் சென்றுள்ளது, முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
கடைசியாக, மறைந்த பா.ஜ., மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ், வெளியுறவு அமைச்சராக இருந்த போது, 2015 டிசம்பரில் பாகிஸ்தானுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.