ADDED : டிச 31, 2024 06:13 AM

லண்டன் : ஸ்காட்லாந்தில் மாயமான, 22 வயதான இந்திய மாணவி, அங்குள்ள ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தின் பெரும்பாவூரைச் சேர்ந்தவர் சான்ட்ரா சாஜு, 22. இவர், ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ஸ்காட்லாந்தில் உள்ள ஹெரியட் வாட் பல்கலையில் படித்து வந்தார். இதற்காக, ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பர்க்கில் தங்கியிருந்தார்.
இந்நிலையில், கடந்த 6ம் தேதி லிவிங்ஸ்டன் ஆல்மண்ட்வலே என்ற பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிற்கு பொருட்கள் வாங்க சாஜு சென்றார். அதன்பின் அவர், தன் அறைக்கு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது நண்பர்கள் அளித்த புகாரின்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இளம் பெண் ஒருவரின் உடல், எடின்பர்க்கில் உள்ள நியூபிரிட்ஜ் அருகே ஆல்மாண்ட் ஆற்றில் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மீட்புக்குழு உதவியுடன் ஆற்றில் மிதந்த உடலை போலீசார் மீட்டனர்.
இது, மாயமான சாஜுவாக இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அவரது நண்பர்கள், ஆற்றில் மிதந்த உடல், சாஜு உடையது தான் என்பதை உறுதிப்படுத்தினர். இது குறித்து கேரளாவில் உள்ள அவரது குடும்பத்தாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.