இஸ்ரேல் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பு பாலஸ்தீன அதிபருடன் மோடி ஆலோசனை
இஸ்ரேல் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பு பாலஸ்தீன அதிபருடன் மோடி ஆலோசனை
ADDED : செப் 24, 2024 02:06 AM

நியூயார்க், அமெரிக்க சென்றுள்ள பிரதமர் மோடி, நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி, பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் ஆகியோரை நேற்று சந்தித்து பேசினார்.
மூன்று நாட்கள் அரசு முறைப் பயணமாக, 21ல் அமெரிக்க சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினார்.
அழைப்பு
தொடர்ந்து, 'குவாட்' அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற அவர், அந்த அமைப்பில் அங்கம் வகிக்கும், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, ஆஸ்திரேலியா பிரதமர் ஆன்டனி அல்பனீஸ் ஆகியோருடனும் பேச்சு நடத்தினார்.
இதையடுத்து, நியூயார்க்கில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில், புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
இந்நிலையில், ஐ.நா., பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க, அமெரிக்காவின் நியூயார்கிற்கு வந்த நம் அண்டை நாடான நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலியை, பிரதமர் மோடி நேற்று சந்தித்தார்.
அப்போது, எரிசக்தி, தொழில்நுட்பம், வர்த்தகம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து, இரு நாடுகளின் தலைவர்கள் விவாதித்தனர்.
பின், நேபாளத்துக்கு வரும்படி மோடிக்கு கே.பி.சர்மா ஒலி அழைப்பு விடுத்தார். இதை ஏற்ற மோடி, விரைவில் வருவதாக உறுதி அளித்தார்.
இதைத் தொடர்ந்து, பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது, இஸ்ரேல் தாக்குதலால் காசாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து அவர் கவலை தெரிவித்தார்.
மேலும், பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதற்கு இந்தியாவின் ஆதரவை, பிரதமர் மோடி மீண்டும் உறுதிப்படுத்தினார்.

