கலிதா ஜியா உடல் நலம் விசாரித்த மோடி; வங்கதேச கட்சி வரவேற்பு
கலிதா ஜியா உடல் நலம் விசாரித்த மோடி; வங்கதேச கட்சி வரவேற்பு
ADDED : டிச 08, 2025 07:04 PM

டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா உடல்நலன் குறித்து பிரதமர் மோடி விசாரித்தது மிக சிறந்த நகர்வு என்று வங்கதேச தேசியவாத கட்சி பாராட்டி உள்ளது.
வங்கதேச தேசியவாத கட்சித் தலைவரும், அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான கலீதா ஜியா இதயம், நுரையீரல் தொற்று காரணமாக டாக்காவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணம் அடைய வேண்டும் என்று பிரதமர் மோடி வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார்.
இந் நிலையில், பிரதமர் மோடியின் இந்த செயலால் வங்கதேச தேசியவாத கட்சி நெகிழ்ச்சி அடைந்துள்ளது. இது ஒரு மிகச் சிறந்த நகர்வு என்று அக்கட்சி பாராட்டி உள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் இஷ்தியாக் அஜிஸ் உல்பத் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;
இது ஒரு மிக சிறந்த நடவடிக்கை(பிரதமர் மோடியை குறிப்பிடுகிறார்). இதை சொல்ல இந்திய அரசாங்கம் மேற்கொண்ட இந்த நடவடிக்கை சரியானது என நான் நினைக்கிறேன். இத்தகைய நலன் விசாரிப்புகளை வங்கதேச தேசியவாத கட்சியும் பின்பற்றி உள்ளது. நலன் விசாரிப்புகளை எங்கள் கட்சி ஏற்றுக் கொள்கிறது.
கலீதா ஜியா, மிக சிறந்த பெண்மணிகளில் ஒருவர். தனது கணவரின் கொடூரமான கொலை சம்பவத்திற்கு பின்னர், அவர் நாட்டுக்கு செய்தவை அசாதாரணமானது. இல்லத்தரசியாக இருந்து, அரசியல்வாதியாக மாறியவர். தமது ஆளுமையின் மூலம், ஒவ்வொரு வங்கதேசத்தவரின் இதயத்தை வென்றவர்.
இரு நாடுகளின் மக்களின் நலன்களுக்காக ஒத்துழைப்பை வலியுறுத்துகிறோம். இரு அரசுகளும் அமர்ந்து தாங்களாகவே முடிவு எடுக்க வேண்டும். இந்திய அரசாங்கம், ஏழு சகோதரிகளை (இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களை குறிப்பிடுகிறார்) மேம்படுத்த விரும்பினால், வங்கதேசம் அதற்கு தேவை.
இரு அரசுகளும் இதற்காக ஒன்றாக அமர்ந்து பேசி முடிவு எடுக்க வேண்டும். ஏழு சகோதரிகளின் வளர்ச்சிக்கு எங்களின் துறைமுகங்கள், பிற வசதிகள் மூலம் உதவ முடியும் என்று எண்ணுகிறேன்.
இவ்வாறு இஷ்தியாக் அஜிஸ் உல்பத் கூறினார்.

