அமெரிக்காவுடனான உறவில் பாதிப்பு ஐ.நா., கூட்டத்துக்கு மோடி போகவில்லை
அமெரிக்காவுடனான உறவில் பாதிப்பு ஐ.நா., கூட்டத்துக்கு மோடி போகவில்லை
ADDED : செப் 07, 2025 01:00 AM

நியூயார்க்:வரி விவகாரத்தில் அமெரிக்கா உடனான உறவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நியூயார்க்கில் நடக்கும் ஐ.நா., பொது சபை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவில்லை.
அவருக்கு பதிலாக, நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில், ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் பொது சபை கூட்டம் நடைபெறும்.
இதன்படி, 80வது பொது சபை கூட்டம் நாளை மறுதினம் துவங்குகிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருள், 'ஒன்றாக சிறப்பாக செயல்படுங்கள்: அமைதி, வளர்ச்சி மற்றும் மனித உரிமை களுக்காக 80 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலும்' என்பதாகும்.
உயர்மட்டக்குழு கூட்டம் வரும் 23 முதல் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. பாரம்பரிய முறைப்படி இந்தாண்டு தலைமை ஏற்றுள்ள பிரேசில் முதலிலும், அதை தொடர்ந்து அமெரிக்காவும் தங்கள் பேச்சுடன் இக்கூட்டத்தின் முதல் அமர்வை துவக்கி வைக்கின்றன.
பொது சபை உயர்மட்டக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் திருத்தப்பட்ட பேச்சாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்தியா சார்பில் ஒரு அமைச்சர் பிரதிநிதித்துவப்படுத்துவார் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரும் 27ம் தேதி இந்த அமர்வில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்ட பேச்சாளர்களுக்கான முந்தைய பட்டியலில், 26ம் தேதி பிரதமர் மோடி உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இஸ்ரேல், சீனா, பாகிஸ் தான் மற்றும் வங்கதேச அரசு தலைவர்கள் வரும் 26ம் தேதி பொது விவாதத்தில் உரையாற்ற உள்ளனர். இதற்கு முன்னதாக வரும் 23ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையாற்ற உள்ளார்.
இது, டிரம்ப் அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்ற பின் ஆற்ற உள்ள முதல் உரையாகும்.
ஐ.நா., பொது விவாதத்துக்கான பேச்சாளர்களின் பட்டியல் தற்காலிகமானது மற்றும் உயர்மட்டக் கூட்டம் துவங்குவதற்கு முன்னதாக அட்டவணைகள் மற்றும் பேச்சாளர்களில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கேற்ப பட்டியல் மீண்டும் புதுப்பிக்கப்படும்.
அமெரிக்காவுடன் வரி தொடர்பான பிரச்னை தீவிரமடைந்துள்ளது. இதையடுத்தே, அமெரிக்க பயணத்தை பிரதமர் மோடி தவிர்த்துள்ளதாக கூறப்படுகிறது.