மல்லையா, நீரவ் மோடியை நாடு கடத்த பிரிட்டன் பிரதமரிடம் மோடி வலியுறுத்தல்
மல்லையா, நீரவ் மோடியை நாடு கடத்த பிரிட்டன் பிரதமரிடம் மோடி வலியுறுத்தல்
ADDED : நவ 20, 2024 02:05 AM

ரியோ டி ஜெனிரோ :பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோரை நாடு கடத்துவதில் விரைவான நடவடிக்கை எடுக்கும்படி, பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டாமரிடம், பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
ஜி - 20 அமைப்பின் உச்சி மாநாடு, தென் அமெரிக்க நாடான பிரேசிலில் நடக்கிறது. இதில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமர் கெய்ர் ஸ்டாமரை நேற்று சந்தித்தார். கடந்த ஜூலையில் நடந்த தேர்தலில் வென்று பிரதமரான பின், கெய்ர் ஸ்டாமருடன் பிரதமர் மோடியின் முதல் சந்திப்பு இது.
இந்த சந்திப்பின்போது, தாராள வர்த்தக ஒப்பந்தத்தை விரைவுபடுத்துவது குறித்து இரு தலைவர்களும் பேசினர். கடந்த, 2022 ஜனவரியில் துவங்கி, 14 சுற்றுகள் பேச்சு நடந்துள்ளது. இருப்பினும் சில விஷயங்களில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
வரும் புத்தாண்டு துவக்கத்தில் இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு, தாராள வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ள ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
இதைத் தவிர, பல இரு தரப்பு உறவுகள், சர்வதேச பிரச்னைகள் தொடர்பாகவும் இரு தலைவர்களும் பேசினர்.
வங்கிகளில் கடன் வாங்கி, 9,-000 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா மீது வழக்குகள் உள்ளன. இதைத் தொடர்ந்து, 2016ல் அவர் பிரிட்டனுக்கு தப்பிச் சென்றார். அதுபோல் வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி நீரவ் மோடி, கடந்த ஐந்து ஆண்டுகளாக, லண்டன் சிறையில் உள்ளார்.
இந்த இருவரையும் நாடு கடத்தி வருவதற்கான முயற்சிகளில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. பிரிட்டன் பிரதமருடனான சந்திப்பின்போது, இந்த இருவரையும் உடனடியாக நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி, பிரதமர் மோடி வலியுறுத்தினார்.