'திருடியதை திருப்பி கொடுங்கள்' மன்னர் சார்லசுக்கு எதிராக எம்.பி., கோஷம்
'திருடியதை திருப்பி கொடுங்கள்' மன்னர் சார்லசுக்கு எதிராக எம்.பி., கோஷம்
UPDATED : அக் 22, 2024 02:28 PM
ADDED : அக் 22, 2024 01:56 AM

கான்பரா ஆஸ்திரேலியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஆஸ்திரேலிய பூர்வகுடிகள் பெருமளவு கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது.
தற்போதும் ஆஸ்திரேலியாவில் பிரிட்டன் அரச குடும்பத்தின் கீழ் நாடு இருப்பதற்கு, பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் ஒன்பது நாள் பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ளார். மன்னராக 2022ல் பதவியேற்ற பின், முதல் முறையாக ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.
மன்னர் சார்லஸ் மற்றும் அவருடைய மனைவி கமீலாவுக்கு பெரும் வரவேற்பு வழங்கப்பட்டது. பல்வேறு நிகழ்ச்சிகளில் இருவரும் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய பார்லிமென்டில் நடந்த நிகழ்ச்சியில் மன்னர் சார்லஸ் பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசி முடித்த நிலையில், ஆஸ்திரேலிய பூர்வகுடியான பெண் எம்.பி., லிடியா தோர்ப் எழுந்து, காலனியாதிக்கத்துக்கு எதிராகவும், சார்லசுக்கு எதிராகவும் கோஷமிட்டார்.
அவர் கூறியதாவது:
நீங்கள் இனப் படுகொலை செய்துள்ளீர்கள். எங்களிடம் இருந்து திருடிய எங்களுடைய எலும்புகள், மண்டை ஓடுகள், குழந்தைகள், எங்கள் மக்களை திருப்பிக் கொடுங்கள்.
நீங்கள் எங்கள் நாட்டை சீரழித்து விட்டீர்கள். எங்களுக்கு குடியரசு வழங்கும் ஒப்பந்தத்தை தாருங்கள். இது உங்களுடைய நாடு அல்ல. நீங்கள் எங்களுடைய மன்னரும் அல்ல.
இவ்வாறு அவர் கோஷமிட்டார். அவரை, பார்லிமென்ட் காவலர்கள் தடுத்து அழைத்துச் சென்றனர்.
இதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி ஆல்பனீஸ் உடன் மன்னர் சார்லஸ் பேசினார்.
அப்போது, ''நீங்கள் ஆஸ்திரேலியா மீது பெரும் மரியாதை வைத்துள்ளீர்கள். எங்களுடைய அரசியலமைப்பு தொடர்பாக நாங்களேமுடிவு எடுத்துக் கொள்ளும் அதிகாரத்தை எங்களுக்கு வழங்க வேண்டும்.
''இதை, நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம். குடியரசு வழங்க வேண்டும் என்று கூறி வருகிறோம். ஆனால், எதுவும் நடக்கவில்லை,'' என, ஆல்பனீஸ் கூறினார்.
முன்னதாக, மன்னர் சார்லஸ் தம்பதியை வரவேற்கும் வகையில் பார்லிமென்டில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, ஆறு மாகாணங்களின் தலைவர்கள் மறுத்துவிட்டனர். இவர்கள், பூர்வகுடிகள் ஆதரவாளர்கள்.